
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், மாநில அரசையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் பொதுக் கூட்டம் நேற்று (28-02-25) நடைபெற்றது. இந்த விழாவில், நடிகரும் பா.ஜ.க நிர்வாகியுமான சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், விஜய் போல் மிமிக்ரி செய்து அவரை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, “அவர் என்ன சொல்றார்னா... அவங்க நிதி கொடுக்க மாட்றாங்க, இவங்க வாங்க மாட்றாங்க ஹாஸ்டாக் போட்டு விளையாடுறாங்க. அன்பு சகோதரர் விஜய், தெரிந்து கொண்டு பேச வேண்டும். நீங்கள் பிரபலமான நடிகர். நானே உங்களை சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறீர்கள் என்று சொல்லி இருக்கிறேன். உண்மையை பேச கற்றுக்கொள்ளுங்கள். பேப்பர் படித்து கொண்டு பேசுகிறீர்கள். நான் உள்ளத்தில் அறிந்து உண்மையை பேசுவதால் எனக்கு பேப்பர் தேவை கிடையாது.
அரசியலுக்கு புதிதாக வருபவர்களை நான் வரவேற்பேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வாருங்கள். ஆனால், பேசும்போது கருத்தோடு பேசுங்கள். உங்கள் பிரபலத்தை வைத்து மக்களை திசை திருப்பாதீர்கள். உங்களுக்கு அரசியல் வியூகத்தை வகுப்பதற்கு, இந்தி தெரிந்த பிரசாந்த் கிஷோர் சொல்லி கொடுக்கிறார். யாரை ஏமாற்றுகிறீர்கள். வாட் ப்ரோ, ஏன் ப்ரோ, ஒய் ப்ரோ.. அவர் சொந்த மாநிலத்திலேயே தோல்வி அடைந்திருக்கிறார். இது எல்லாம் மக்களை திசை திருப்பும் முயற்சி. இதை சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், உண்மையை சொல்லாமல் பொய்யை சொல்லி மக்களை ஏமாற்ற நினைத்தால் அதை சொல்லி தான் ஆக வேண்டும் என்று தான் நான் இங்கு சொல்கிறேன்.