அனைத்துத்தரப்பினரின் எச்சரிக்கையும் மீறி பள்ளிகள் திறக்கப்பட்டால் எக்காரணத்தை கொண்டும் அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது. மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவை காரணம் காட்டி மிரட்ட கூடாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா நோய் பரவல் இன்னும் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படவில்லை. தற்போது நாளுக்கு நாள் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கை அளித்தாலும் மீண்டும் நோய் தொற்று அதிகரிக்குமா என்ற அச்ச உணர்வு அனைவரது மனதிலும் இருக்கிறது.
பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் தமிழக அரசின் உத்தரவுகளை மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. தமிழக அரசு எடுத்த முடிவின்படி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் விரும்பமாட்டார்கள். கரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படும் சூழலே நிலவுகிறது.
தங்கள் பிள்ளைகளின் உடல்நலனே முதன்மை என்றுதான் அனைவரும் கருதுவார்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பள்ளிகளில் கடைபிடிக்கப்பட்டாலும் கொரோனா தொற்று மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தையும், அச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது.
அதனால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை மாணவர்கள் சரிவர கடைப்பிடிப்பது உள்ளிட்டவையை செயல்படுத்துவது சிரமமாகவே இருக்கும். அதேபோல கழிவறைகள் எந்தவொரு அரசுப்பள்ளியிலும் சுத்தமாக இருப்பது கிடையாது.
பல அரசுப்பள்ளிகளில் பயன்படுத்த தேவையான தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறையே நிலவுகிறது. விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இன்னும் விடுதிகள் திறக்கப்படாமல் இருப்பதால் விடுதிகளில் தங்கி பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாது.
ஒருவேளை விடுதிகள் திறக்கப்பட்டால் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. பல நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டதால்தான் கொரோனா பரவல் அதிகரித்தது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அனைத்துத்தரப்பினரின் எச்சரிக்கையும் மீறி பள்ளிகள் திறக்கப்பட்டால் எக்காரணத்தை கொண்டும் அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது. மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவை காரணம் காட்டி மிரட்ட கூடாது. தமிழக அரசு எந்தவொரு முடிவை எடுத்தாலும் தெளிவாக எடுக்க வேண்டும். மக்களை குழப்ப நிலையில் வைத்திருப்பதை கைவிட வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.