
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் இன்று (01.03.2025) அக்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினராலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2025 - 2026ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளியில் சேருகின்ற மழலைகளின் சேர்க்கைக்கான சான்றிதழ்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அதோடு அவர்களை வாழ்த்தி தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது இந்தித் திணிப்பை எதிர்ப்போம் என உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார். இதனையடுத்து பெரியார் திடலில் தந்தை பெரியாருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் தனது குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார்.
அதன் பின்பு கோபாலபுரத்தில் உள்ள அவரது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அதே போன்று சி.ஐ.டி காலனியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவப்படங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின்னர் சென்னை தேனாம் பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அவர், அக்கட்சியின் தொண்டர்களைச் சந்தித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது சகோதரரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன், தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.