தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.நாளை முதல்கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், '''மக்களின் மனநிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகி இருந்தாலும்கூட உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை வேட்பாளர்களை பார்க்கின்றார்கள். இந்த முறை எல்லா இடத்திலும் நல்ல வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். அதிகமாக பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். பட்டியல் இனத்தில் உள்ள சகோதரிகளுக்கு அதிக வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். குறிப்பாக நேற்று திருப்பத்தூரில் பிரச்சாரத்தில் இருந்த பொழுது, அங்கு இருக்கக்கூடிய வேட்பாளர்களில் 70 சதவீதம் பெண்கள் தான். இதையெல்லாம் பார்க்கும் பொழுது நமக்கு வாய்ப்பு இருப்பதாக பார்க்கின்றேன்'' என்றார்.