மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்களும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், “மற்ற கட்சிகளெல்லாம் தொண்டர்கள் கட்சித் தலைவர்களை தலைவரே என அழைத்த காலத்தில் தம்பி என்றும் அண்ணா என்றும் அழைத்து குடும்ப பாசத்தை வளர்த்த பெருமை இந்த கட்சிக்கு மட்டும் தான் உண்டு. நான் அண்ணா காலத்திலும் கட்சியைப் பார்த்துள்ளேன். அப்போதைய கட்சியின் நிலையைப் பார்த்துள்ளேன். பொதுக்குழு, செயற்குழு பலத்தை பார்த்துள்ளேன். கலைஞர் வரலாற்று மனிதர். இலக்கியம், பேச்சு, எழுத்து, நாடகம், கட்சி, போராட்டம் என எங்கும் இருப்பார். தமிழ்நாட்டில் யார் எந்த ஏட்டின் பக்கத்தை புரட்டினாலும் அங்கு கலைஞர் பெயர் இருக்கும்.
வரலாற்று சாதனைகள் சில மங்கிப் போகும், சில சாதனைகள் தாக்குப் பிடித்து நிற்கும். அப்படிப்பட்ட சாதனைகளை செய்தவர் கலைஞர். உலகத்தில் சில மொழிகள் உயர்தனிச் செம்மொழி என பெருமை படுத்தப்பட்டுள்ளது. லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் போன்ற மொழிகளுக்கு உயர்தனிச் செம்மொழி என்ற பெருமை உண்டு. ஆனால் அவை இறந்து போன மொழிகள். ஆனால் உயர்தனிச் செம்மொழி என்ற பெருமையோடு இப்போதும் இருப்பது தமிழ்மொழி மட்டும் தான். தமிழுக்கு செம்மொழி வேண்டும் என்று பலர் போராடினார்கள். கடைசியில் கலைஞர் தான் தமிழுக்கு செம்மொழி என்ற பட்டத்தை வாங்கிக் கொடுத்தார். இதற்கு முழு பொறுப்பும் பெருமையும் தங்களையே சாரும் என கலைஞருக்கு இந்திரா காந்தி கடிதம் எழுதினார். தமிழ் இருக்கும் வரையில் செம்மொழி என்ற பெயர் இருக்கும். செம்மொழி இருக்கும் வரையில் கலைஞர் பெயர் இருக்கும்.
இந்திய வரலாற்றிலும் கலைஞருக்கு இடம் உண்டு. ஆகஸ்ட் 15, ஜனவரி 26 இரண்டு தினங்களிலும் நியமிக்கப்பட்ட ஆளுநர்களே கொடியேற்றிக் கொண்டு இருந்தனர். அதுவரையில் அனைத்து முதலமைச்சர்களும் அதன்படியே நடந்து கொண்டிருந்தார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் இரு தினங்களிலும் தேசியக் கொடி ஏற்றுகிறார். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏன் ஏற்றக்கூடாது என்று முதலில் குரலெழுப்பியவர் கலைஞர். அதனால் அன்று இருந்த இந்திரா காந்தி நீங்கள் ஏற்றலாம் என உரிமை கொடுத்தார். உலக வரலாற்றிலும் கலைஞர் உள்ளார். ஒரு கட்சியின் தலைவராக 50 ஆண்டுகாலம் இருந்தவர் உலகத்திலேயே ஒருவர் கலைஞர் தான். இது வரலாற்று ஏடுகளில் பதியப்பட வேண்டிய செய்திகள். கின்னஸ் புத்தகத்தில் வரவேண்டிய செய்திகள்” எனக் கூறினார்.