அதிமுக முன்னாள் தலைவர்கள் பற்றிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்த அது கூட்டணி முறிவு வரை சென்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
இந்த முடிவை அதிமுக தொண்டர்கள் வரவேற்று கொண்டாடினர். அதேபோல பாஜக தரப்பிலும் தொண்டர்கள் வரவேற்று இருந்தனர். அதிமுக மற்றும் பாஜக தலைமைகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. இதனால் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது என்ற பேச்சும் எழுந்தது.
இருதரப்பு தலைமைகளும் கூட்டணி முறிவுக்கு பிறகு அது குறித்து வாய் திறக்காத நிலையில், அண்மையில் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, ''தொண்டர்களின் உணர்வை மதித்தே கூட்டணி முறிக்கப்பட்டது. இந்த தேர்தல் மட்டுமல்லாது 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கண்டிப்பாக கூட்டணி இருக்காது'' என தெளிவுபடுத்தி இருந்தார்.
மறுபுறம் பாஜக தலைமை கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை எங்களுக்கு வேண்டிய அறிவுறுத்தல்களை கொடுக்கும் என்றே தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கோவையில் இருக்கும் அண்ணாமலை இன்று மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு டெல்லியில் தேசியத் தலைமைகளை சந்திக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதிமுக நிர்வாகிகள் டெல்லிக்கு சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து தமிழக பாஜக தலைவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அண்ணாமலையின் இந்த பயணமானது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
கூட்டணி முறிவு பற்றிய தன்னுடைய கருத்தை எடுத்துரைப்பதற்காகவும், புதிய கூட்டணி அமைப்பது குறித்தும் பேசவும் இந்த பயணம் இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் அமமுகவின் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டடோரை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்கப்படலாம் என்ற ஒரு யூகமும் கிளம்பியுள்ளது. காரணம், அண்ணாமலை 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி என பேசியதுதான் முறிவுக்கு காரணமே தவிர, அதிமுக தலைவர்களை விமர்சித்தது காரணமல்ல என அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.