நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இருந்தாலும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜகவின் வளர்ச்சி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பாஜக தலைமை தமிழகத்தில் பாஜகவை வளர்க்க ஒரு சில உத்தரவு போட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து உத்தரவு போட்டது. இதனையடுத்து தமிழக பாஜக நிர்வாகிகள் அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தமிழக பாஜக தலைவரின் பதவி காலம் முடியும் நிலையில் இருப்பதால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து முதல் கட்டமாக பாஜகவின் புதிய மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அது மட்டுமின்றி தேசிய செயற்குழு உறுப்பினர்களும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக தேர்தல் அலுவலர் ராதா மோகன் சிங் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜக மாநில தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தமிழகத்திலும் பாஜக தலைவர் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. தமிழகத்தில் பொன்.ராதாகிருஷ்னன், சி.பி.ராதாகிருஷ்னன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் போட்டியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் எஸ்.வி.சேகரும் பாஜக தலைவர் பதவிக்கு ஆசை படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் டெல்லி வட்டாரங்களில் தனக்கு நெருக்கமானவர்களிடம் தூது விடுவதாகவும் கூறுகின்றனர். ஆனால் பாஜக தலைமை தமிழகத்திற்கு மீண்டும் ஒரு பெண் தலைவரை கொண்டு வரலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் வானதி சீனிவாசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.