கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த செந்திலுக்கும் பாண்டியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நிர்மலாவிற்கும் கடந்த எட்டு வருடத்திற்கு முன்பு திருமணமான நிலையில் அவர்களுக்கு கனிஷ்கா என்ற 6 வயது பெண்குழந்தையும் ஹரிணி என்கிற 4 வயது பெண்குழந்தையும் உள்ளனர்.
கணவர் செந்தில் நெல் அறுக்கும் அறுவடை இயந்திரத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார். இந்த நிலையில் நிர்மலா தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். நேற்று மாலை நாகுகுப்பம் தெற்கு மேடு பகுதியில் இருக்கும் பால் சேகரிக்கும் நிலையத்தில் பாலை ஊற்றி விட்டு வீட்டிற்குத் திரும்பியவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தனர். இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் நிர்மலாவை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. மேலும் அவரது தம்பி மணிவண்ணன் வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது வீட்டிற்கு அருகே உள்ள சோளக்காட்டில் அவர் பால் ஊற்றி வந்த பால் கேன்கள் மற்றும் காய்கறிகள் துப்பட்டா சிதறிக் கிடந்ததும் தெரியவந்தது.
அதிலிருந்து சற்று தூரத்தில் தனது அக்கா நிர்மலா இறந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுது கத்திக் கூச்சலிட்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பெயர் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் மர்மமான முறையில் சோள காட்டில் உயிரிழந்த விவகாரத்தில் பெண்ணை வன்கொடுமை செய்து கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.