கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணி சார்பாக, பா.ம.க வேட்பாளர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். அ.ம.மு.க - தே.மு.தி.க கூட்டணியில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தி.மு.க கூட்டணியில் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அதையடுத்து நெய்வேலி தொகுதியிலுள்ள முத்தாண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணனும், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த மாநிலச் செயற்குழு உறுப்பினர் நீதிராஜன் உள்ளிட்ட பலரும் விருப்ப மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பாளர் அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விருத்தாசலம் சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். தற்போது விருத்தாசலம் பகுதியில் கூட்டணியில் உள்ள முக்கியப் பிரமுகர்களை சந்தித்து ராதாகிருஷ்ணன் ஆதரவு திரட்டி வருகிறார். மேலும், அவர் தற்போது வரை வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. அதேசமயம் கடந்த சில தினங்களாக தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநிலச் செயற்குழு உறுப்பினர் நீதிராஜன் என்பவர் தான் அத்தொகுதியின் வேட்பாளர் என்று முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாற்றப்பட்டாரா? என பொதுமக்கள் குழம்பி இருக்கின்றனர். இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு காங்கிரஸ் துண்டு மற்றும் காங்கிரஸ் கொடியுடன் விருத்தாசலம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, நீதிராஜன் மாலை அணிந்தபடி, தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக விருதாச்சலம் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார். பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரான சப்-கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனுத் தாக்கல் செய்தார். முன்னதாக பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த போது, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி பெயரை சொல்லாமல், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனான கார்த்தி சிதம்பரம் பெயரைச் சொல்லி முழக்கங்கள் எழுப்பி வாழ்த்துகள் தெரிவித்து மாலை அணிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மனுத் தாக்கல் செய்யாத நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு பிரமுகர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். எனவே, தொகுதி வேட்பாளர் நீதிராஜனா அல்லது ராதாகிருஷ்ணனா என கட்சியினர் குழம்பிப் போயுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர். காங்கிரஸ் தலைமையின் உட்கட்சிப் பூசலால், விருத்தாசலம் தொகுதியில் இரண்டு காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நீதிராஜன், “பாரம்பரியமாக தங்களின் குடும்பம் காங்கிரஸ் கட்சியில் உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். தற்போது பத்தாம் வகுப்பு கூட படிக்காதவரும், கொல்லைப்புறமாக நெய்வேலி பகுதியில் இருந்து, விருத்தாசலம் தொகுதிக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வந்திருக்கும் ராதாகிருஷ்ணனுக்கு எவ்வித வாக்குகளும் கிடைக்காது. காங்கிரஸ் தலைமை கை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை தனக்கு தரும் என்ற நம்பிக்கையில் வேட்புமனுத் தாக்கல் செய்ததாக” தெரிவித்தார்.