திண்டுக்கல் மாநகரில் உள்ள புனித லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளி முன்பாக திராவிட இலக்கியப் பேரவை சார்பில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு திருவள்ளுவர் இலக்கியப் பேரவை பொறுப்பாளர்களான வசந்தி கணேசன், சம்பத், வீரமணி ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் பழனி சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில் குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன், மாநகர துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு பள்ளியின் முன்பாக இருந்த திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “கடந்த 20 ஆண்டுகளாக திண்டுக்கல் மாநகரில் திருவள்ளூர் சிலையை வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து திருவள்ளுவர் இலக்கிய பேரவை முயற்சி செய்து வந்ததை தற்போது நிறைவேற்றி இருக்கிறார்கள். அதை நான் பாராட்டுகிறேன்.
1949-களிலேயே திருவள்ளுவருக்கு விழா எடுத்தவர் தந்தை பெரியார். மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் உள்ளது. இப்படிப்பட்ட திருவள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில்தான் தலைவர் கலைஞர் 2000-த்தில் கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை வைத்து இந்தியாவையே திரும்பப் பார்க்க வைத்து அழகு பார்த்தார். அதுபோலத்தான் தற்போது முதல்வர் ஸ்டாலினும் கலைஞர் வழியிலேயே திருவள்ளுவர் சிலையைச் சீரமைத்து வருகிறார்.
சென்னைக்கு யார் சென்றாலும் வள்ளுவர் கோட்டத்தை பார்க்காமல் வர மாட்டார்கள் அப்படிப்பட்ட வள்ளுவர் கோட்டத்தையும் முதல்வர் சீரமைக்க உத்தரவிட்டிருக்கிறார். அதுபோல் தமிழக முழுவதும் பணிகள் தொடங்கப்படும். தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ்.படித்தவர்கள் பலர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் அதுபோல் மருத்துவத்துறையிலும் தமிழ் வழி கொண்டுவரப்பட இருக்கிறது” என்று கூறினார். இதில் மாவட்ட துணை செயலாளர் பிலால், முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் மாநகர பகுதி செயலாளர்களான ராஜேந்திரகுமார். ஜானகிராமன் உள்பட திருவள்ளுவர் இலக்கிய பேரவை பொறுப்பாளர்களுடன் கட்சி பொறுப்பாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.