சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பாக கு.க. செல்வம் போட்டியிடுவார் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்த நிலையில், அத்தொகுதியில் நடிகை குஷ்புவை நிறுத்தியது பாஜக. முன்னதாக, குஷ்பு தனக்கு சேப்பாக்கம் தொகுதி ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது என அத்தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பிருந்தே அத்தொகுதி மக்களை சந்திப்பது, ஆதரவு திரட்டுவது என வேகம் காட்டினார். பின் அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் குஷ்பு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் நேற்று (17.03.2021) பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஷ்பு, செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது அவர், “ஆயிரம் விளக்கு தி.மு.க.வின் கோட்டை என்று கூறுவதே வேடிக்கையாக உள்ளது. அப்படி நினைத்திருந்தால் மு.க.ஸ்டாலின் எதற்கு கொளத்தூரில் போட்டியிடுகிறார்? எத்தனை பேர் போட்டியிட்டாலும் நல்லவர் யார் என்பதை மக்களே முடிவு செய்வார்கள். இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில் குடிநீர் தட்டுப்பாடு, கழிவுநீர் பிரச்சனை ஆகியவை இருக்கிறது. இதை தீர்த்து வைத்தாலே போதும். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பொறுப்பாளராக எனது கடமையை சரியாக செய்துள்ளேன். எனவே ஆயிரம் விளக்கு எனது தொகுதியாக இருந்தாலும், அடிக்கடி அங்கும் சென்று மக்களைச் சந்திப்பேன்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையை கதாநாயகன், கதாநாயகி என்று மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். உண்மையான கதாநாயகி நான்தான் என்று மக்கள் எப்போதோ கூறிவிட்டனர். அவர் நிறைய விஷயங்களை இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும். பல விஷயங்களில் அவர் பின்வாங்கி வருகிறார்” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, “தேர்தலில் முதன்முதலில் போட்டியிடுகிறீர்கள். பயம், தயக்கம் இருக்கிறதா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த குஷ்பு, ‘‘பயம் என்ற வார்த்தைக்கு என் அகராதியிலேயே இடமில்லை. முதல் தடவை போட்டியிடுகிறேன் என்பதால் வெற்றிபெற கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். வெற்றிக்கொடியை எட்டிப் பறிக்க போராடி வருகிறேன். என்னை வாழவைத்த மக்கள், என்னை ஜெயிக்கவும் வைப்பார்கள் என்று நம்புகிறேன்’’ என்று கூறினார்.