Skip to main content

‘சிங் இஸ் கிங்’; நவீன இந்தியாவின் பொருளாதார சிற்பி!

Published on 27/12/2024 | Edited on 27/12/2024
Manmohan Singh is the architect of the modern Indian economy

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், டெல்லியில் நேற்றிரவு திடீரென காலமானார். மன்மோகன் சிங் மறைவால் நாடே துக்கத்தில் மூழ்கியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்ட மாமேதை என புகழாரம் சூடப்படும் அளவிற்கு அவரது கல்வித்தகுதியும் வரலாறும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்தியா​வின் 14வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்​சிங் கடந்த 1932 செப்டம்பர் 26ல் தற்​போது பாகிஸ்​தானில் உள்ள மேற்கு பஞ்சாப் காஹ் கிராமத்தில் பிறந்தார். மன்மோகன் பிறந்து சில மாதங்களே இருந்த போது அவருடைய அம்மா அம்ரித் கவுர் இறந்துவிட்டார். அவருடைய அப்பா வேலைகளுக்காக அடிக்கடி வெளியே சென்றுவிடுவார். தன்னுடைய உறவினர் வீட்டில் வாழ்ந்து வந்த மன்மோகன் சிங்கை அவருடைய பாட்டி தான் வளர்த்து வந்தார். சொந்த கிராமத்தில் அவர் படித்த பள்ளிக்கு பின்னாளில் மன்மோகன் சிங் ஆண்கள் அரசுப்பள்ளி என பாகிஸ்தான் அரசு பெயர் சூட்டியது. 

மிகவும் அமைதியான சுபாவத்தைக் கொண்ட மன்மோகன் சிங் படிப்பில் சிறந்து விளங்கினார். 1947ம் ஆண்டு, பிரிவினைக்குப் பிறகு மன்மோகன் சிங் அவருடைய குடும்பத்தோடு இந்தியாவுக்கு வந்தார். அவர்கள் ஆரம்பத்தில் உத்தராகண்டில் அமைக்கப்பட்டிருந்த ஹல்த்வானி அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர். பாகிஸ்தானில் அவர்கள் வாழ்ந்த வீடு தற்போதும் அங்கு உள்ளது.

பிரிவினையால் ஏற்பட்ட பதட்டம் காரணமாக, அவருடைய தேர்வுகளை அவரால் எழுத முடியாமல் போனது. இந்தியாவில் தான் அவர் அந்த தேர்வுகளை எழுதினார். பிறகு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க சென்ற மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றார். அதன்பிறகு, 1957-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார டிரிபோஸ் பட்டமும் 1962-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் டி.பில் பட்டமும் பெற்றார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகத் தனது பணியை துவங்கிய மன்மோகன்சிங், உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனமான டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸிலும் பேராசிரியராகத் தொடர்ந்தார்.

Manmohan Singh is the architect of the modern Indian economy

பொருளாதாரத்தில் மன்மோகன் சிங்கின் திறமையை கேள்விப்பட்ட மத்திய அரசு  1971-ல், வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக்கியது. தொடர்ந்து அவர், 1972-ல் மத்திய நிதி அமைச்சகத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் UNCTAD செயலகத்தில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு 1987 1990வரை ஜெனீவாவில் தெற்கு ஆணையத்தின் பொதுச்செயலாளர், மத்திய நிதி அமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பிரதமரின் ஆலோசகர் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்தார்.

அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த மன்மோகன் சிங், 1991 முதல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். 1991ம் ஆண்டு இந்தியா கடுமையான பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்டது. அந்நிய செலாவணி மிக மோசமான சூழலில் இருந்த போது நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் மன்மோகன் சிங். அப்போது அவர் தாராளமயமாக்கல் கொள்கையை அறிவித்தது தான் இந்தியப் பொருளாதாரத்தை மொத்தமாக மாற்றியது. அந்த நம்பிக்கைக்கு ஏற்றபடி செயல்பட்டு, இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதன் வாயிலாக இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்திருப்பதற்கு மன்மோகன் சிங் முதன்மைக் காரணம் என்றால் மிகையில்லை. 

இதன் நீட்சியாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் வரலாற்று வெற்றிகள் கிடைத்தன. இதன் சார்பில் மன்மோகன், கடந்த 22 மே 2004 மற்றும் மீண்டும் 22 மே 2009 அன்று என இரண்டு முறை பிரதமராக பதவியேற்றார். பிரதமராக இருந்த காலகட்டத்திலும் மன்மோகன் சிங் பல முக்கிய சாதனைகளைப் படித்துள்ளார். வெளியுறவு விவகாரத்தில் அவரே நேரடியாகப் பல முடிவுகளை எடுத்தார். குறிப்பாக அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைக் கொண்டு வருவதில் அவரது பங்கை வரலாறு என்றும் மறக்காது. நமது நாட்டில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஆட்சியில் தான் நமது நாட்டிற்குத் தேவையான பல்வேறு முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 

அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவில் ஜி20 உச்சி மாநாடு நடந்தது. அப்போது மன்மோகன் சிங்கை அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா பாராட்டி பேசியிருந்தார். அங்குச் சர்வதேச அரங்கில் பேசிய ஒபாமா, "ஜி20 மாநாட்டில் மன்மோகன் சிங் பேசும்போது,​​உலக நாட்டுத் தலைவர்கள் கவனமாகக் கேட்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். பொருளாதாரப் பிரச்சனைகள், உலக வல்லரசாக இந்தியா எழுச்சி பெறுவதற்கான நுணுக்கங்கள் மற்றும் உலக அமைதி குறித்த அவரது ஆழ்ந்த அறிவே அதற்குக் காரணம்" என்று பேசியிருந்தார்.

Manmohan Singh is the architect of the modern Indian economy

மிகவும் அமைதியான குணம் கொண்ட மன்மோகன் சிங், யாரிடமும் அதிர்ந்து பேசாதவர். அவர் பேசமாட்டார்; அவர் செயல்பாடுதான் பேசும். அவரது அமைதியான குணம் காரணமாகவே, “மவுன”மோகன் சிங், பலவீனமான பிரதமர் எனக் கிண்டல் செய்யப்பட்டார். ஆனால், விமர்சித்த பலரே, இப்போது மன்மோகன் சிங்கை வியந்து பாராட்டுகின்றனர். சரியாக, 2014 ஆட்சியை விட்டு வெளியேறுவதற்கு சில மாதங்கள் முன்பாக மன்மோகன் சிங் செய்தியாளர்கள் முன்னிலையில் ஒரு வாக்கியத்தை சொன்னார். "History will be kinder to me than contemporary media and opposition parties in Parliament" - “இன்றைய ஊடகங்களை விடவும் அல்லது நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளை விடவும் இந்த வரலாறு என்னை கனிவுடன் நடத்தும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்” என மன்மோகன் சிங் பேசினார். 

10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்  வாழும் காலத்திலேயே, அவர் சொன்ன வாக்கியம் பலித்தது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரைக் கடுமையாக விமர்சித்த பலரும் கூட, அவரது பொருளாதார நடவடிக்கைகளை பின்னாளில் பாராட்டினர். அவர் தலைமையிலான ஆட்சியில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததைப் பாராட்டி வருகின்றனர். இறுதியாக ‘சிங் இஸ் கிங்’ என்று நிரூபித்து மாபெரும் புகழோடு நம்மை விட்டு மறைந்திருக்கிறார் மன்மோகன் சிங்.