சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் கடந்த 25ஆம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் நேற்று (26.12.2024) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அண்ணா பல்கலைக்கழக மாணவி 100 என்ற காவல் அவசர அழைப்புக்கு கால் செய்து தகவலை தெரிவிக்கிறார். அதை வைத்து போலீஸ் டீம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு செல்லும் போது, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் (POSH) டீம் கமிட்டியினுடைய பேராசிரியரும், பாதிக்கப்பட்ட மாணவியும் புகார் கொடுக்கிறார்கள்.
அந்த புகாரை வைத்து எஃப்.ஐ.ஆர் போடுகிறோம். அந்த எஃப்.ஐ.ஆரில், பாதிக்கப்பட்டவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதை எழுத வேண்டும். அதில், போலீஸ் எந்த திருத்தமும் செய்யக் கூடாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி கேமரா இருக்கிறது. இதில், 56 சிசிடிவி கேமரா வேலை செய்கிறது. அதில் இருந்து வந்த தகவலை வைத்தும் தான் நாங்கள் குற்றவாளியை பிடித்திருக்கிறோம். அந்த பல்கலைக்கழகத்தில் 140 பேர் செக்யூரிட்டி இருக்கிறார்கள். அதில் 49, 49, 42 என மூன்று ஷிப்டாக போட்டு அந்த செக்யூரிட்டிகளை பணியில் அமர்த்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, ஞானசேகரைன் மனைவி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறாரா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அந்த மாதிரி எந்த தகவலும் கிடையாது” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று (27.12.2024) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் (POSH) கமிட்டியில் இருந்து அப்படிப்பட்ட புகார் வரவில்லை என்பது தான் எங்களுக்கு கிடைத்த சங்கடமான செய்தி. ஒரு வேளை, மனுதாரர் அந்த புகார் தராமல் இருந்து அந்த குழுவுக்கு யார் மூலமாகவோ செய்தியாக வந்திருந்தால் கூட அழைத்துப் பேசி நாங்கள் தீர்வு காண வாய்ப்பு இருந்திருக்கும். காவல்துறைக்கு புகார் மனு சென்ற பிறகு, பல்கலைக்கழகம் அதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறது. துறையின் அமைச்சர் என்ற முறையில், நானும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன். குற்றவாளியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக விசாரணை தொடர்கிறது.
இதற்கிடையில், மகளிர் தேசிய ஆணையம் இந்த வழக்கில் உள் நுழைந்து விசாரிக்க முற்படுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கும், தமிழக அரசு, பல்கலைக்கழகமும், உயர்கல்வித்துறையும் முழு ஒத்துழைப்பு தரும். சிசிடிவி கேமரா, நுழைவு வாயிலிலும், மாணவர் - மாணவியர் விடுதியிலும், உணவகத்திலும், சாலைகளிலும் பெரும்பாலும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 100க்கு 80 சதவீதம் சரிவர தான் இருக்கிறது. 10, 20 சதவீதம் குறைபாடுகள் உண்டு. அந்த தவறு நடந்த இடத்திற்குள் சிசிடிவி கேமரா இல்லை தான். சம்பவம் நடந்த நேரம் இரவு 8 மணி. குற்றவாளியான அந்த நபர், பல்கலைக்கழகத்துக்கு அடிக்கடி வந்துபோகும் பழக்கத்தையும் பெற்றிருக்கிறார்.
இதனை வாயில் காப்பாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். முழு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவரது மனைவி கூட, அந்த பல்கலைக்கழகத்தில் பணி நிரந்தரமில்லாத பணியில் ஆற்றிக் கொண்டிருப்பார். வருவார்கள், போவார்கள் என்ற நிலையில் தான் சந்தேகப்பட்டு இவரை உள்ளே வராதே என்று சொல்லுகிற சூழல் இல்லாத நிலை இருந்திருக்கிறது” என்று கூறினார். புகார் கொடுத்தது யார்? சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா இருக்கிறதா? ஞானசேகரனின் மனைவியின் வேலை என காவல் ஆணையர் அருண், அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்திருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவியின் புகார் பெறப்பட்டது குறித்து அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறை அவசர உதவி எண் 100 க்கு நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வந்த காவல்துறையினரிடம் அண்ணா பல்கலைக்கழகத்தின் (POSH - Prevention of Sexual Harrasment Committee) உள் விசாரணைக் குழுவினைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரங்களை சொல்லி புகார் அளித்திருந்தார். காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வந்து விசாரணை செய்யும் போதுதான் இந்த சம்பவம் தொடர்பாக போஸ் குழுவில் இருந்த மற்றவர்களுக்கு இந்த பிரச்சனை தெரியவந்துள்ளது. அதை வைத்துதான் போஸ் குழு நேரடியாக புகார் அளிக்கவில்லை என தெரிவித்திருந்தேன். அது தவறான பொருள்படும்படி அமைந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.