Published on 30/07/2019 | Edited on 30/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பாக தீப லட்சுமியும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் வேலூர் இடைத்தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியும் போட்டியிடவில்லை என்று அறிவித்தனர். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று பிரச்சாரத்தில் ஓபிஎஸ் பேசும் போது, ஏசி.சண்முகம் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவுக்காக பணியாற்றியவர்.ஸ்டாலின் எதனை சூழ்ச்சிகள் செய்தாலும் அவரால் முதல்வராக முடியாது. அதிமுக ஆட்சியில் சாதாரண தொண்டன் கூட முதல்வர் ஆக முடியும். ஆனால் திமுகவில் இந்த நிலை இருக்காது. மேலும் பேசிய அவர், மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அதிமுக கொண்டுவருவதில்லை. இருந்தாலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று தெரியவில்லை என்று கூறினார்.