![Minister Senthil Balaji has said cm Stalin will rule in 2026 as well](http://image.nakkheeran.in/cdn/farfuture/sO5Pl-Vc7xcpG_VKrdolTXhCVMabP15-Ad7S1grWCtQ/1739340890/sites/default/files/inline-images/58_63.jpg)
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, நடைபெற்ற அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்டவை இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. இதனைத் தொடர்ந்து, 1,17,158 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி எம்.எல்.ஏவாக பதவிஏற்றுக்கொண்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 23,872 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சமூக வலைதள பக்கத்தில், “நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் முதலமைச்சரின் உழைப்பிற்கும், திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.
குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி தோல்வி மேல் தோல்வி கண்டு தோல்விசாமி இல்லாத பொய்களை வீசுவதே அன்றாட அலுவலாக வைத்திருக்கிறார். அதனால்தான் மக்களை சந்திக்க முடியாமலும் திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் தேர்தலை சந்திக்காமல் ஓடி ஒளிந்துக் கொண்டார்.
வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களின் நலனுக்காகவும் இந்த அரசு பாடுபடும் என அறிவித்து செயல்பட்டார் தமிழ்நாடு முதலமைச்சர்; அதன் காரணமாக இன்று ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு வந்துள்ளது. தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது; “Pro Incumbency” தான் எங்கும் எதிரொலிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் அலைதான் தமிழ்நாடு முழுக்க அடித்துக்கொண்டிருக்கிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.