Skip to main content

“பழனிச்சாமி என்ற தீய சக்தியிடம் இரட்டை இலை சின்னம்  இருக்கக் கூடாது...” - புகழேந்தி ஆவேசம்!

Published on 12/02/2025 | Edited on 12/02/2025

 

PUGALENTHI Obsession edappadi Palanisamy should not have a double leaf symbol

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன்படி இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பான மனுக்களை விசாரிக்கத் தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி  உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதே சமயம் புகழேந்தி தேர்தல் ஆணையம், ஓ.பி.ரவிந்தரநாத் ஆகியோர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுத் தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விரிவான விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வகையில் இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை கடந்த 7ஆம் தேதி (07.02.2025) மீண்டும் நடைபெற்றது. இவ்வாறு அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (12.02.2025) காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு அளித்தனர். அதில், “கட்சியின் சின்னம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. எனவே இரட்டை இலை சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம். அதோடு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்குத் தடைகோரிய எடப்பாடி பழனிசாமியின் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” எனத் தீர்ப்பு அளித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இரட்டை இலையை ஒதுக்க வேண்டிய அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்குத்  தான் உள்ளது என்பது தான் என்னுடைய வாதமாக இருந்தது. மிக்க மகிழ்ச்சியான தருணமாகப் பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீதிபதி மிக அருமையான தீர்ப்பைச் சென்னை நீதிமன்றத்தில் கொடுத்து இருக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் தொடர்பான தடையாணை நீக்கப்பட்டுள்ளது.

PUGALENTHI Obsession edappadi Palanisamy should not have a double leaf symbol

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். பொதுச்செயலாளர் என்ற பதவியைப் பெயர் பயன்படுத்தக்கூடாது. கட்சி பெயரைப் பயன்படுத்தக் கூடாது. உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே அவர் யாரையும் ஏமாற்ற வேண்டாம் என்பது தான் தொடர்ந்து நான் கூறிவந்தேன். என்னைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் கொடுக்க இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்பதல்ல. பழனிச்சாமி என்ற தீய சக்தியிடம் இரட்டை இலை சின்னம்  இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய நோக்கம்” என ஆவேசமாகப் பேசினார்.

சார்ந்த செய்திகள்