
திரைப்பட இயக்குநர் பேரரசுவிற்கு பாஜகவில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கிய பேரரசு கடந்த 2020 ஆம் ஆண்டு முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் இணைந்தார். இதன் பின் பாஜக கூட்டங்கள், சினிமா நிகழ்ச்சிகளில் இவர் பேசிய சில கருத்துகள் விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையில், தமிழ்நாடு மாநில கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு கௌரவத் தலைவராக செயல்பட்டு வந்த பேரரசுவிற்கு, தற்போது வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் துணைத் தலைவராக பதவி அளிக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அண்மையில், நடிகை காயத்ரி ரகுராம் தமிழக பாஜக கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்த நிலையில், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். தற்போது பேரரசுவிற்கு அப்பிரிவின் மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.