அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். பெரும் இடர்களுக்கு உள்ளாகி வெளிநடப்பு செய்தார். அதனைத் தொடர்ந்து அந்தப் பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதேபோல், இன்று துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி, ஓ.பி.எஸ்.க்கு கடிதம் எழுதும் உரிமை கூட கிடையாது என்று தெரிவித்தார்.
அதேபோல், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, “நீங்கள் (ஓ.பி.எஸ்) ஒருங்கிணைப்பாளரே கிடையாது" என்று அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று ஓ.பி.எஸ், சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அவரின் ஆதரவாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம், கட்சியை முழுவதும் எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிவிடாமல் கண்டிப்பாக காப்பாற்றுவோம் என நம்பிக்கை அளித்ததாக கூறப்படுகிறது.