நிதி ஆயோக் கூட்டத்தில் பேச அனுமதிக்காவிட்டால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு போராட்டம் நடத்த முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட், சிறப்பு அந்தஸ்து தராமல் இழுத்தடித்தது என மத்திய அரசுடன் இணக்கமற்ற சூழலில் நீடிக்கிறது தெலுங்கு தேசம் கட்சி. வாக்குறுதியை நிறைவேற்றாத பா.ஜ.க. மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, சமீபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, பிரதமர் மோடியை சந்திரபாபு நாயுடு முதல்முறையாக இன்று நேரில் சந்திக்க இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் 15ஆவது நிதிக்குழு பரிந்துரை உள்ளிட்டவை குறித்து 24 பக்க அறிக்கையை சந்திரபாபு நாயுடு தயார் செய்துள்ளார். இன்றைய கூட்டத்தில் அவரது முறை வரும்போது பேச அனுமதி மறுக்கப்பட்டால், போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.