ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழக மாணவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர மத்திய வெளியுறவு அமைச்சகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரஷ்யாவின் வோல்காகிராட் மாநிலத்தில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் அங்குள்ள வோல்கா ஆற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்த மாணவர்களுக்கு பா.ம.க. சார்பில் அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்டீபன், கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த விக்னேஷ், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் ஆனந்த் ஆகிய நால்வரும் வோல்காகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தனர். வார விடுமுறையில் அங்குள்ள வோல்கா ஆற்றில் குளிக்க சென்றபோது ஒரு மாணவர் நீரில் அடித்து செல்லப்படுவதை பார்த்த ஸ்டீபன், அந்த மாணவரைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். ஆனால், அவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவர்களைக் காப்பாற்ற முயன்ற மேலும் இரு மாணவர்களும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்ததாக தெரிகிறது.
கடுமையான நெருக்கடிகளுக்கு இடையில் மருத்துவம் படிப்பதற்காக தங்களின் பிள்ளைகளை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்து விட்டு, அவர்கள் மருத்துவர்களாக திரும்பி வருவார்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்த பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் இந்த செய்தி எந்த அளவுக்கு பேரிடியாக அமைந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. அவர்களின் துயரத்தை பா.ம.க.வும் பகிர்ந்து கொள்கிறது.
ரஷ்யாவில் வோல்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வந்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க மத்திய வெளியுறவு அமைச்சகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.