ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்குக் கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்டவை இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 08.15 முதல் எண்ணப்பட்டன.
மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்கு பெறுவோர் டெபாசிட் தொகையை தக்க வைப்பர். அதன்படி ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் தொகை பெறுவதற்கு 25,777 வாக்குகள் பெற வேண்டிய நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குகளை பெற முடியாததால் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 75% வாக்குகளை பெற்று திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை-1,17,158, நாம் தமிழர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை-23,872.
இந்நிலையில் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''ஈரோடு இடைத்தேர்தல் முடிவு தமிழக முதல்வரின் நல்லாட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பெரியார் குறித்து சீமான் கட்டிய பொய் கோட்டை ஈரோடு தேர்தல் முடிவால் இடிந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை அவமதிக்காத வகையில் அழைத்து வரவேண்டும். உச்சநீதிமன்றம் கேள்விகளால் ஆளுநருக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.