'என்எல்சி நிறுவனம் 299 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். அதில் ஒரு ஆள் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை' என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
பாமகவின் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,''நெய்வேலி நிறுவனத்திற்கு நிலம் எடுப்பது சம்பந்தமாக மக்களிடம் கருத்து கேட்டோம். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் வைத்துள்ள கோரிக்கை என்னவென்று சொன்னால் என்எல்சி நிறுவனம் என்பது மிக மிக மோசடி நிறுவனம். மக்களை ஏமாற்றுகிற நிறுவனம். மக்களை சுரண்டுகிற நிறுவனம். இதுவரை 1956-57 லிருந்து தமிழகத்தை சீரழித்துள்ளது. அவர்கள் சொல்வதை நம்பி நீங்கள் ஏமார்ந்துவிடக் கூடாது. நீங்கள் தான் இந்த மாவட்டத்திற்கு நிர்வாக பொறுப்பு. நீங்கள் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமே தவிர, என்எல்சி நிறுவனத்திற்கு பாதுகாப்பாகவோ, ஆதரவாகவோ இருக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம்.
எங்களைவிட மாவட்ட ஆட்சியருக்கு கோபம் கொந்தளித்திருக்க வேண்டும் ஏனென்றால் 299 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். இதில் ஒரு ஆள் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இது எங்களுக்கு கொதிக்குது ஆட்சியருக்கும் கொதித்திருக்க வேண்டும். அப்பொழுது தமிழ்நாட்டுக்கு உரிமையே இல்லை என்பதுதான் இதில் தெரிகிறது. இதுவரை இங்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி நிகர லாபம் வந்துள்ளது. இந்த நிகர லாபத்தில் 50 ஆயிரம் கோடி வட மாநிலங்களுக்கு செலவழித்து இருக்கிறார்கள். இந்த மாவட்டத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை'' என்றார்