திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பான விவகாரத்தில் வதந்தி பரப்பியவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், தேசிய மகளிர் ஆணைய சிறப்பு உறுப்பினர் குஷ்பூ மற்றும் பாஜக மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழக பாஜக துணைத் தலைவர், தேசிய மகளிர் ஆணைய சிறப்பு உறுப்பினர் குஷ்பூ ஆகியோர் உரையாடினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கூட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் பேசும் பொழுது, “இன்று தமிழகத்தில் பாஜக தான் எதிர்க்கட்சி என்று ஒவ்வொரு கூட்டத்திலும் நிரூபித்துக்கொண்டு உள்ளது. எதிர்க்கட்சி பாஜக தான். திறனற்ற எடப்பாடி பழனிசாமி...” என பேசிக்கொண்டு இருந்த போதே பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன் உடனே அவரது மைக்கை பிடுங்கினார்.
பாஜக அதிமுக கூட்டணியில் தற்போது சில முரண்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. பாஜக நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு அவர் பதில் கொடுத்ததும் சர்ச்சை ஆனது. ஆனால் இரு கட்சிகளின் தலைமைகளும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்றே கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய பாஜக ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததும் அதை கண்டித்து மைக்கை கரு.நாகராஜன் பிடுங்கியதும் பாஜக அதிமுக அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.