தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் கட்சி இரண்டாம் கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கேட்டதாகவும், தி.மு.க. தலைமை 24 தொகுதிகள் வரை தர முன்வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, "தி.மு.க. - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு சுமுகமாக இருந்தது. தி.மு.க.வுடன் நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும். காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்பதை தி.மு.க.விடம் கூறினோம். தி.மு.க. கூட்டணியில் அனைவரும் உள்ளோம் என்ற நோக்கில்தான் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். மு.க.ஸ்டாலின்- ராகுல்காந்தி இணைந்து பரப்புரை மேற்கொள்வது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.
கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு 41 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகள் என மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளது. மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் தி.மு.க. தலைமை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.