காலணியை வெளியே விட்டு வரவும் அறிவிப்பைப் பார்த்திருப்போம். ஆனால் கர்நாடக சட்டமன்றக் குடியிருப்பில், எலுமிச்சையை வெளியே விட்டுவரவும் என அறிவிப்பு வைக்காத குறையாய் கெடுபிடி செய்கிறார்கள். எல்லாம் பயம்தான் காரணம். அதுவும் குறைந்த எண்ணிக்கையிலான வித்தியாசத்தில் மெஜாரிட்டி பெற்று கூட்டணி ஆட்சி நடக்கும் கர்நாடகத்தில் பயத்துக்கு கேட்கவும் வேண்டுமா?
பாதுகாப்புக் காரணங்களுக்காக துப்பாக்கி, கத்தி போன்றவற்றைத் தடுப்பதில் காரணமிருக்கிறது. எலுமிச்சம் பழத்தை ஏன் தடுக்கவேண்டும்? அதிகாரப்பூர்வமாகச் சொல்லமறுக்கும் விதானா செளதா காவல்காரர்கள் உங்கள் பெயரை குறிப்பிடமாட்டோம் என்றால் காதில் கிசுகிசுக்கிறார்கள்.
“ஏற்கெனவே ஆட்சி கவிழ்ப்பு பயத்திலிருக்கிறது குமாரசாமி அரசு. விதானா செளதாவில் சில அமைச்சர்கள், அதிகாரிகளின் வீடுகளின் அருகே ஜன்னலருகே குங்குமம் தடவிய எலுமிச்சை, பச்சைமிளகாய் போன்றவை கண்டறியப்பட்டன. எனவே வசியம் போன்ற பிளாக்மேஜிக் வேலைகள் நடக்கலாம் என ஆளுங்கட்சியினர் சந்தேகிக்கின்றனர். அதனால்தான் எலுமிச்சம்பழத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதுவும் எழுத்துப்பூர்வ உத்தரவு எதுவும் அளிக்கப்படவில்லை. எல்லாம் வாய்மொழி உத்தரவுதான்” என சிரிக்கிறார்கள்.
அடிக்கிற வெயிலுக்கு ஜூஸ் போடத்தான் கொண்டுபோகிறேன் என்றாலும் எலுமிச்சம்பழத்தை விடமாட்டார்கள் போலிருக்கிறதே!