தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மும்முரமாக செய்து வருகின்றன. பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை என ஒருபுறம் பரபரப்பாக இயங்கிவரும் அதேவேளையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களைப் பெறும் பணியையும் கட்சிகள் தொடங்கியிருக்கின்றன.
கடந்த 17ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது. பின்னர் 28ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என காலக்கெடுவை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது. இதேபோல் அதிமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளிலும் விருப்ப மனு பெறப்படுகிறது.
திமுக சார்பில் ஆவடி தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என அந்த மாவட்டத்தின் திமுக செயலாளர் சா.மு.நாசர் விருப்ப மனு கொடுத்திருந்தார். அதன்படி ஆவடி தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடப் போகிறாரா என திமுக மேலிட பொறுப்பாளர் ஒருவரிடம் விசாரித்தபோது, “தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என அந்தந்த தொகுதி திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்புவார்கள். அது அவர்களின் விருப்பம், உரிமை. அதில் எந்த தவறும் கிடையாது.
ஆனால், எந்தத் தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். திமுக தலைவர் எந்தத் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பதையும் திமுக தலைமைதான் அறிவிக்கும். அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், அனைத்து தொகுதிகளையும் தனது சொந்த தொகுதிபோல் நினைத்துதான் மக்கள் பணிகளைச் செய்வார்” என்றார்.