
தமிழக சட்டப்பேரவையில், 2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் நிதிநிலை அறிக்கையும், இரண்டாம் நாளில் வேளாண் அறிக்கையையும் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (17-03-25) தொடங்கியது. அப்போது அதிமுக கொண்டு வந்த சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. டிவிஷன் முறையில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அதிக நேரம் கொடுத்ததாக முதல்வர் கூறுகிறார். அதிமுக ஆட்சி நடக்கும் போது சிறப்பான ஆட்சி நடந்தது. அதனால், அவரால் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு பிரச்சனைகள் தலைதூக்கியிருந்த காரணத்தினால் மக்களுடைய பிரச்சனையை சட்டமன்றத்தில் எடுத்துரைக்கும் விதமாக பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் எங்களுடைய கடமையை முழுமையாக நாங்கள் செயல்படுத்தினோம். அதனால் தான் 2 மணி நேரம் 52 நிமிடம் பேசவேண்டியதாக இருந்தது.
சட்டப்பேரவைத் தலைவர் பதவி நீக்கும் தீர்மானத்தின் மீது நான் பேசியதை டிவியில் ஒளிப்பரப்பு செய்யவில்லை. ஆனால், முதல்வர் பேசுவதை ஒளிப்பரப்பு செய்கிறார்கள். இதுதான் ஒருதலைபட்சம் என்கிறோம். சபாநாயகருக்கு என்ன பணியோ அதை செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால், அதற்கு மாறாக தான் செயல்பட்டு கொண்டிருந்தார் என்பதை தான் நாங்கள் கோடிட்டு காண்பித்தோம். அதற்கு எந்த விளக்கம் தெரிவிக்கவில்லை. எனவே, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு கொள்ளாமல் இரண்டு தரப்புக்கும் சமமாக நடப்பது தான் சபாநாயகருக்கு அழகு. அதை தான் நாங்கள் வலியுறுத்தி சொன்னோம். ஆனால், இன்றைய தினம் சட்டப்பேரவைத் தலைவர் வந்த பிறகு, எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பேசும்போது மீண்டும் பழைய நிலைமைக்கே போனார்.
அதுபற்றி கேட்ட போது, மீண்டும் சட்டப்பேரவைத் தலைவர் பதிலளிக்கிறார். எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் அமைச்சர்களுக்குப் பதிலாக சபாநாயகரே பதில் அளிக்கிறார். இது புனிதமான நாற்காலி, நீங்கள் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. அதிமுகவை உடைக்க நினைப்பவர்கள் உடைந்து போவார்கள். திமுக ஆட்சியில் சுமார் ரூ.40,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மிதந்து கிடக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக வழக்கு தொடர்வோம். அமலாக்கத்துறையைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?. மடியில் கணம் இல்லை என்றால், வழக்கை சந்தித்து வெற்றிபெற வேண்டியதுதானே?. ” எனத் தெரிவித்தார்.