பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் பெறப்பட்ட கடன்களின் ஒத்திவைக்கப்பட்ட தவணைகள் மீது வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் வருவாய் இழந்து தவிக்கும் கடன்தாரர்களுக்கு இது நிம்மதியளிக்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையிலும் கூட, வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூறி வந்தன. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை வேறுவழியின்றி ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு உச்சநீதிமன்றமும் வந்திருந்த நிலையில், மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகள் மீதான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. முன்னாள் தலைமை கணக்காயர் ராஜிவ் மெஹ்ரிஷி தலைமையிலான வல்லுனர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
2 கோடிரூபாய் வரையிலான வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள், சிறு தொழில் கடன்கள், கல்விக் கடன்கள், தனிநபர் கடன்கள், வீட்டு உபயோகக் கடன்கள், கடன் அட்டை மீதான நிலுவைத் தொகை ஆகியவற்றுக்கு இது பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து நாளை மறுநாள் 5-ஆம் தேதி அதன் தீர்ப்பை வழங்கும். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு கடன்தாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
கரோனா வைரஸ் அச்சம் காரணமாக அமைப்பு சார்ந்த தொழில்துறை, அமைப்பு சாரா தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால், அவர்களின் பொருளாதார சுமையை ஓரளவு குறைக்கும் வகையில், பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து வகையான கடன் தவணைகளை செலுத்துவதை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்; அவ்வாறு ஒத்திவைக்கப்படும் கடன் தவணைகள் மீதான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தான் தொடக்கம் முதலே வலியுறுத்தி வந்தது. மார்ச் 19, 27 ஆகிய தேதிகளில் நானும், மார்ச் 23-ஆம் தேதி மருத்துவர் அன்புமணி இராமதாசும் இதுதொடர்பாக விரிவான அறிக்கைகளை வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து மார்ச் 27-ஆம் தேதி 3 மாதங்களுக்கு கடன் தவணை ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வட்டித் தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை. அதையும் அறிவிக்க வேண்டும் என்று மார்ச் 27, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளிலும் அதற்குப் பிறகும் பா.ம.க. வலியுறுத்தியது.
நிறைவாக கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திலும் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்று கூறப்பட்ட போதிலும் கூட, பா.ம.க. நம்பிக்கையிழக்காமல் இதற்காக குரல் கொடுத்து வந்தது. இத்தகைய சூழலில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகள் மீதான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேநேரத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகையின் நுணுக்கங்கள் முழுமையாக தெரியவில்லை. இந்திய ரிசர்வ் வங்கி கடன் தவணை ஒத்திவைக்கப்பட்ட போதிலும் கூட லட்சக்கணக்கானோர் கடன் தவணையை தவறாமல் செலுத்தி வந்தனர். ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்ததால், அது பெரும் சுமையாக அமைந்து விடும் என்பதால் தான் அவர்கள் தெரிந்தவர்களிடமும், நண்பர்களிடமும் கடன் வாங்கி தவணை செலுத்தினார்கள். அவர்கள் தவணையை செலுத்தி விட்டார்கள் என்பதாலேயே அவர்களுக்கு சலுகை வழங்க மறுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், அது அவர்களின் நேர்மைக்கு வழங்கப்பட்ட தண்டனையாக அமைந்துவிடும்.
எனவே, அவர்கள் தவணை செலுத்தாமல் இருந்திருந்தால், வட்டிக்கு வட்டியாக அவர்களுக்கு எவ்வளவு தொகை தள்ளுபடி செய்யப்பட்டிருக்குமோ, அந்த தொகையை அவர்களுக்கு மானியமாக வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் இருந்து மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற சிறு கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.