Skip to main content

தயாநிதிமாறன் தோல்வி பயத்தால் அவதூறுகளை பரப்புகிறார்: எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தோல்வி பயத்தால் எஸ்.டி.பி.ஐ. கட்சி மீது அவதூறுகளை பரப்பி வருகின்றார் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;

 

Dayanidhi Maran



நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி, மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகின்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளராக கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிடுகின்றார். தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் மக்கள் பிரச்சினைகள் குறித்தும், தொகுதியின் அடிப்படை பிரச்சினைகளை நிறைவேற்றுவது குறித்தும் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி பிரச்சாரங்களை வீரியமாக செய்துகொண்டிருக்கிறது.
 

அதுமட்டுமின்றி 50க்கும் மேற்பட்ட அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
 

கடந்தகாலங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மேற்கொண்ட மக்கள் பணிகள் மூலமும் தமிழக உரிமைகள் சார்ந்த போராட்டங்கள் மூலமும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் மூலமும் தொகுதி மக்களுக்கு நன்கு பரிட்சயமான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர் தெஹ்லான் பாகவிக்கு பெருகிவரும் ஆதரவால், எதிர்த்து போட்டியிடும் அனைத்து கட்சிகளும் கலக்கமடைந்துள்ளன.

 

குறிப்பாக இரண்டு முறை மத்திய சென்னை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காத, பல்வேறு முறைகேடு வழக்குகளில் சிக்கி விசாரணையை எதிர்கொண்டுவரும் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தோல்வி பயத்தால் எஸ்.டி.பி.ஐ. கட்சி மீது அவதூறுகளை பரப்பி வருகின்றார்.


 

sdpi



அமமுக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வீரியமான தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிட்டு தடுத்தும், பிரச்சாரத்துக்கு செல்லும் பெண்களை தாக்கியும், தரக்குறைவாக விமர்சித்தும் தனது அரசியல் அராஜக போக்கை திமுக கட்டவிழ்த்துவிட்டு வருகின்றது. இதற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சி சட்டரீதியான போராட்டங்களை மேற்கொள்ளும் வேளையில், எஸ்.டி.பி.ஐ. கட்சி வாக்கிற்கு பணம் கொடுப்பதாகவும், அதனை திமுகவினர் தடுப்பதாகவும் அவதூறுகளை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் மேற்கொண்டு வருகின்றார். தனது ஆதரவு ஊடகங்கள் மூலமும் அந்த தவறான பிரச்சாரத்தை செய்து வருகின்றார். இத்தகைய அவதூறு பிரச்சாரத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.  

 

எஸ்.டி.பி.ஐ. கட்சி குறித்து மக்கள் நன்கறிவார்கள். கடந்த காலத்தில் இதே மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் வெற்றிக்காக தயாநிதிமாறன் மேற்கொண்ட வன்முறை தாக்குதல்களையும் மக்கள் அறிவார்கள். தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று தன் மீதான வழக்கின் விசாரணையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற திட்டத்துடனேயே தயாநிதிமாறன் திமுகவினர் உதவியுடன் வன்முறைகளை ஏவிவருகின்றார். திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு தேர்தலின் மூலம் மக்கள் தக்க பதிலடி தருவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்