
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொள்ளாதது; ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது; அண்மையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் உடனான காணொளி ஆலோசனைக் கூட்டத்தில் 4 மணி நேரம் காத்திருந்தும் அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி பேசாமல் மௌனம் காத்தது என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எடப்பாடி- செங்கோட்டையன் இடையேயான பனிப்போர் சுற்றிச் சுழன்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே 2025 - 2026ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில், சபாநாயகர் அப்பாவு ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகக் கூறி அவரை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். மேலும், சபாநாயகருக்கு எதிராகச் சட்டப்பேரவை செயலாளரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வழங்கினர்.
இத்தகைய சூழலில் தான் அதிமுக கொண்டு வந்த சபாநாயகரை நீக்கக் கோரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (17.03.2025) நடைபெற்றது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம், துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் நடைபெற்றது. இதனையடுத்து இந்த தீர்மானம் தோல்வியடைந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 63 பேர் வாக்களித்த நிலையில், 154 பேர் எதிராக வாக்களித்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது. பேரவையில் நடந்த குரல் வாக்கெடுப்பிலும், டிவிஷன் முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தின் போது எடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன் பேசினார். இந்த தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடைமுறைகள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் விளக்கிக் கூறியதாகக் கூறப்படுகிறது. அதாவது சட்டப்பேரவையில் 2 முறை குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு தான் டிவிசன் முறைக்கு செல்லும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்துப் பேசுவதைத் தவிர்த்து வந்த நிலையில் இத்தகைய செயல் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. முன்னதாக செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி ஒற்றுமையாக இருப்பதாகப் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.