வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விருதுநகரில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, "ஜெயலலிதாவை தமிழகத்திற்கு அறிமுகம் செய்து தமிழகத்தை நாசமாக்கிய பாவத்தை செய்தவர்களில் நானும் ஒருவர்" எனக் கூறினார். இது தமிழக அரசியல் களத்தில் பேச்சு பொருளானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஜெயலலிதாவை அநாகரீகமான முறையில் பேசி இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்தது. எம்ஜிஆரால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டவர் ஜெயலலிதா. அவரை அறிமுகப்படுத்தியதில் தனக்கும் பங்கு உண்டு என வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது கேலிக்கூத்தாகவும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது.
இதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பதவிக்காக கட்சி மாறி அமைச்சராகி உள்ள கேகே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தான் சார்ந்துள்ள கட்சியின் தலைமையைக் குளிர்விக்க வேண்டும் என்று நினைத்தால் அவர் சார்ந்துள்ள கட்சியின் தலைவரைத் துதி பாடலாம். அதில் எங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை. அதே சமயத்தில் அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை பற்றி பேசுவது ஒழுக்கமற்ற பொறுப்பற்ற செயல் அது கண்டிக்கத்தக்கது” எனக் கூறியுள்ளார்.