தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.
இந்த நிலையில், விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று (16-02-24) கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து பேசிய முதல்வர் சித்தராமையா, “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்கான ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்படவுள்ளன. தேவையான அனுமதிகளை கொடுத்தால் விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். பெங்களூர் நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை கட்டும்போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு மற்றும் வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது” என்று கூறினார். மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (17-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், சித்தராமையா கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கர்நாடகா அரசால் மேகதாது அணையை கட்ட முடியாது. கர்நாடகா நிதியை ஒதுக்கலாம், குழுவை அமைக்கலாம். ஆனால், தமிழ்நாடு அனுமதியின்றி அணை கட்ட முடியாது. மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதனால், எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது. அதுதான் சட்டம் அதுதான் நியதி” என்று கூறினார்.