
அண்மைக் காலமாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். ஓரிரு தினங்களுக்கு முன்பு, நாதகவின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் தற்போது, நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “என் தாய்மொழியை படிக்க முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டு நீ இந்தி படி என்றால் எப்படி இது?. எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லயே, கொள்கை மொழி என்று தானே இருக்கிறது. பன்மொழி பயில்க என்று தானே வரவேண்டும். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில மக்களுக்கும், அவரவர் தாய் மொழி கொள்கை மொழி தான், ஆங்கிலம் ஒரு பயன்பாட்டு மொழி. விரும்பினால் எந்த மொழியையும் கற்கலாம் என்பது தான் கொள்கை மொழி. புதிய கல்வி கொள்கையை திமுக எதிர்க்கிறது என்று சொல்வது நாடகம் தான். புதிய கல்வி கொள்கையின் பெயரை மட்டும் மாற்றி இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்தார்கள். மும்மொழி திட்டத்தில் எம்மொழி எங்கே என்ற கேள்வி வருகிறது. விரும்பினால் எம்மொழியும் கற்கலாம் என்ற பன்மொழி பயில்க என்று கொண்டு வாருங்கள். கல்வி என்பது மாநில உரிமை, அதை எடுத்துக்கொண்டு அதிகாரம் செய்வதற்கு நீ யார்?. மருத்துவம், கல்வி எல்லாவற்றையும் நீங்களே எடுத்துக்கொண்டால் எதற்கு தான் மாநிலம் இருக்கிறது?. மாநிலத்திற்கு என்ன தான் உரிமை இருக்கிறது?” என்று கூறினார்.
இதையடுத்து, காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக வெளியான தகவல் குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அது தெரியவில்லை. இந்த கட்சிக்குள் முழு சுதந்திரம் இருக்கிறது. இருந்து இயங்குவதற்கும், விருப்பம் இல்லையென்றால் விலகி செல்வதற்கும் முழு சுதந்திரம் இருக்கிறது. இது ஒரு ஜனநாயக அமைப்பு. அவர் முதலில் சமூக செயற்பாட்டாளராக தான் இருந்தார். அவரை அழைத்து வந்தது நான் தான். இலையுதிர் காலம் இருப்பதது போல், எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம். திடீர் திடீரென்று வருவார்கள், போவார்கள். தங்கச்சிக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. கட்சியில் இருக்கிறதா? அல்லது வேறு கட்சியில் இணைந்து செயல்படுவதா? என்ற முடிவெடுக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சு தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பா.ஜ.கவை தவிர மற்ற தமிழக கட்சித் தலைவர்கள் பலரும், புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.