'நேரடி விவாதத்திற்கு தயாரா?' என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிய நிலையில் தொடர்ந்து திமுக அதிமுக இடையே அறிக்கை போர் நீடித்து வருகிறது.
இன்று அறிக்கை வெளியிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி, 'என் பேட்டிக்கு பதில் சொல்லாமல். பெயரே இல்லாமல் ஒரு அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. வெந்ததை தின்று வாய்க்கு வந்தபடி உளறி திரிபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மொட்டை தாத்தா குட்டையில் விழுந்ததுபோல மனம்போன போக்கில் என் மீது காழ்ப்புணர்ச்சியுடன் திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. 42 மாத திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் படும் துயரங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாது பற்றி திருச்சியில் நான் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்திருந்தேன். பிரதான எதிர்க்கட்சி என்பது நிழல் அரசைப் போன்றது. அது சுட்டிக் காட்டும் குறைகளை நேர்மையான அரசு ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும். என் பேட்டிக்கு பதில் சொல்லாமல். பெயரே இல்லாமல் ஒரு அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. கபட வேடம் போடுவதில் பிஎச்டி பெற்ற கட்சி திமுக' என விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் 'மக்கள் நம் பக்கம்; மாற்று முகாம் கலக்கம்' என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெளியான அந்த அறிக்கையில், 'ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்கள் முக மலர்ச்சியே பதில். திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாள். பண்பாடில்லாமல் பேசுவதை கொள்கையாக கொண்டிருக்கும் ஒரு சில தலைவர்களை போல எதிர்க்கட்சித் தலைவரும் இருப்பது வேதனை அளிக்கிறது.
வன்மம் கக்கும் வயிற்று எரிச்சல்காரர்களை கடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மாவட்ட சுற்றுப்பயணத்தின் போதும் மக்கள் என்னை மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். திமுக ஆட்சியின் தன்மையை மக்களின் முகம் மலர்ச்சியே பதிலாக சொல்லிவிடுகிறது. அதைப் பார்த்து சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும் நாம் சாதிப்போம்' என தெரிவித்துள்ளார்.