
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (25.02.2025) 19வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டத்தை கூட்ட முடிவெடுக்கப்பட்டது. அதில் 2026ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கோவையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (26.02.2025) திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “கடந்த 2024ஆம் ஆண்டில், பா.ஜ.க முதல் முறையாக முழு பெரும்பான்மையுடன் ஒடிசாவில் அட்சியை அமைத்துள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு, ஆந்திராவில் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு அமைந்துள்ளது. பாஜக 2025இல் டெல்லியில் வெற்றியுடன் தொடங்கியது. மேலும் 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியுடன் தொடங்கும்.
திமுக தலைமையிலான ஊழல் நிறைந்த, தேச விரோத தமிழக அரசை மக்கள் அகற்ற வேண்டிய நேரம் இது. திமுக உறுப்பினர் சேர்க்கை மூலம் சமூகத்தில் உள்ள அனைத்து ஊழல்வாதிகளையும் திமுகவில் சேர அனுமதித்தது போல் சில நேரங்களில் இருக்கும். உண்மையான பிரச்சினைகளிலிருந்து விலகிச் செல்ல முதல்வர் மு.க. ஸ்டாலினும் அவரது மகனும் பல பிரச்சினைகளை எழுப்புகிறார்கள். இன்று, அவர்கள் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்வது தொடர்பாக விவாதிப்பதற்காக அணைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த உள்ளனர். தொகுதி மறுவரையறைக்குப் பிறகும், தென் மாநிலங்களில் எந்த இடங்களும் குறைக்கப்படாது என்று பிரதமர் மோடி ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ‘மோடி அரசு எப்போதும் மாநிலத்திற்கு அநீதி இழைத்துவிட்டது’ என்று கூறுவார். நான் அவரிடம் சொல்வது என்னவென்றால், நீங்கள் உண்மையுள்ளவராக இருந்தால், நான் கேட்பதற்கு மாநில மக்கள் முன்னிலையில் பதில் சொல்லுங்கள். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது, தமிழகத்திற்கு மானிய உதவி மற்றும் அதிகாரப் பகிர்வு மூலம் ரூ.1,52,901 கோடி வழங்கப்பட்டது. ஆனால் மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5,08,337 கோடியை வழங்கியது. மேலும், மோடி அரசு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1,43,000 கோடியை வழங்கியது” எனப் பேசினார்.