



















தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மேளதாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்புடன் விஜய் விழா நடக்கும் அரங்கத்திற்குள் நுழைந்தார். அவருடன் சிறப்பு விருந்தினராக ஜன் சுராஜ் கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோர் விழாவில் கலந்துகொண்டார். மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் மத்திய அரசையும் மாநில அரசையும் சாடியிருந்தார். இதற்குச் ஒரு படி மேலே சென்ற ஆதவ் அர்ஜுனா மன்னராட்சி என்று பேசி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இப்படியாக த.வெ.க தலைவர் மற்றும் நிர்வாகிகளின் பேச்சுக்களுடனும், விழாவிற்கு வந்தவர்களுக்கு கம கம என மத்திய உணவுடனும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இனிதே நடைபெற்று முடிந்துள்ளது.