
அதிகாலை நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில், 26 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், வீட்டு பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். இவர், சதாரா மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்திற்குச் செல்வதற்காக ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது ராமதாஸ் என்ற நபர், அங்கு வந்து இந்த பெண்ணிடம் சகோதரி என்று அழைத்து பேச்சு கொடுத்துள்ளார். விளக்குகள் இல்லாத நிறுத்தப்பட்ட பேருந்தில் ஏறுவதற்கு துணையாக வருமாறு ராம்தாஸ் கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த பெண் பேருந்திற்குள் நுழைந்ததும், ராம்தாஸ் பேருந்து கதவை பூட்டிவிட்டு வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர், தனது தோழி பயணித்த இரண்டாவது பேருந்தில் ஏறி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை அந்த பெண் கூறியுள்ளார். அந்த தோழி, உடனடியாக இச்சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இன்னும் ராம்தாஸ் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த பேருந்து நிலையம் மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தால் நடத்தப்படும் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். மேலும், காவல் நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.