
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மேளதாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்புடன் விஜய் விழா நடக்கும் அரங்கத்திற்குள் நுழைந்தார். அவருடன் சிறப்பு விருந்தினராக ஜன் சுராஜ் கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோர் விழாவில் கலந்துகொண்டார். மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இவ்விழாவில் பேசிய விஜய், “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தாவிட்டால் கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு கொடுக்கமாட்டார்களாம். எல்கேஜி, யூகேஜி பசங்க சண்டை போடுவார்கள் இல்லையா, அதுபோல் இந்த விஷயத்தில் நடந்துகொள்கிறார்கள். நிதியைக் கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. வாங்க வேண்டியது இவர்களின் உரிமை. ஆனால் இவர்கள் இருவரும், அதுதான் நமது பாசிசமும், பாயாசமும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் அடித்துக் கொள்வது போல் அடித்துக் கொள்வார்களாம், அதை நாங்கள் நம்ப வேண்டுமாம். வாட் ப்ரோ.. இட்ஸ் ராங் ப்ரோ..(What Bro.. It’s very Wrong Bro) யார் சார் நீங்கள்? எல்லாம் எங்கே இருக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பது மக்களுக்கு நனறாக தெரியும்” என்று மறைமுகமாக திமுகவையும் பாஜகவையும் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் விஜய்யின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், “வசனம் பேசுவதில் வல்லவரான விஜய் ஒன்றிய பாஜக அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்? பாசிசம் – பாயாசம் என்று தொடர்ந்து நக்கலடிப்பதைப் பார்த்தால் இரண்டு குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியிருக்கிறது. ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை அவர் படிக்க வேண்டும். பாசிசம் பயங்கரமானது. படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது. உடல் நலத்திற்கு நல்லது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வசனம் பேசுவதில் வல்லவரான @TVKVijayHQ @actorvijay ஒன்றிய பாஜக அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்?
பாசிசம் – பாயாசம் என்று தொடர்ந்து நக்கலடிப்பதைப் பார்த்தால் இரண்டு குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியிருக்கிறது. pic.twitter.com/Tp8X1tbKZk— Shanmugam P (@Shanmugamcpim) February 26, 2025