
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ர கர்நாடகா மாநிலச் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதில், 224 சட்டமன்றத் தொகுதிகளில் அதிகபட்சமான 135 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி அமையும்போதே முதல்வர் பதவிக்கு சித்தராமையாவுக்கும், டி.கே. சிவக்குமாருக்கு கடும் போட்டி மோதல் நிலவியது.
இதனையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு கர்நாடகா முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரையும் நியமித்து கட்சி மேலிடம் அறிவித்தது. மேலும், அதில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலா 2.5 ஆண்டுகள் முதல்வராகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கட்சி மேலிடம் கூறியதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து, சித்தராமையா தான் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியில் நீடிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தார்கள். இதனால், சித்தராமையாவின் ஆதரவாளர்களுக்கும், டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்களுக்கும் அவ்வப்போது உள்கட்சி மோதல் ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டி வந்தனர்.
இதற்கிடையில், துணை முதல்வர் சிவகுமாரை மாநில கட்சித் தலைவராக மாற்ற வேண்டும் என்று ஒரு பிரிவு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர்கள் ஜி. பரமேஸ்வரா, கே.என். ராஜண்ணா மற்றும் சதீஷ் ஜர்கிஹோளி ஆகியோர் டெல்லிக்குச் சென்று, புதிய மாநில காங்கிரஸ் தலைவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மறுபுறம், டெல்லிக்குச் சென்ற சிவக்குமார், அதிகாரப் பகிர்வு குறித்து விவாதித்தாகவும், மாநிலக் கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கருத்தை முன்வைத்ததாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், சித்தராமையாவை தொட்டால் சாம்பலாகி விடுவீர்கள் என்று காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் எச்சரிக்கை கொடுத்துள்ளார். வீட்டுவசதி மற்றும் வக்ஃப் வாரியத் துறை அமைச்சர் ஜமீர் கான் கூறியதாவது, “முதலமைச்சர் நாற்காலி காலியாகவும் இல்லை, கட்சித் தலைவர் நாற்காலியும் காலியாக இல்லை. தலைவர் நாற்காலியை டி.கே. சிவகுமார் வகிக்கிறார், முதல்வர் நாற்காலியை சித்தராமையா வகிக்கிறார். ஒரு பதவி காலியாக இருக்கும்போதுதான் விவாதம் நடக்க முடியும். சித்தராமையாவின் நாற்காலியைத் தொடக்கூட முடியுமா? அது நெருப்பு போன்றது, அதைத் தொட்டால் நாம் எரிந்துவிடுவோம். சித்தராமையா நெருப்பு போன்றவர்” என்று தெரிவித்துள்ளார்.