Skip to main content

“நீதிமன்றமே கதவை திறந்து விட்டுள்ளது; ஆனால் அதற்கு முன்பே...” - அமைச்சர் துரைமுருகன்

Published on 26/03/2023 | Edited on 26/03/2023

 

Minister Duraimurugan has said that the governor should give approval to online rummy this time

 

“ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு இந்த முறை கண்டிப்பாக ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்” அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

 

வேலூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் வேலூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளில் பூத் கமிட்டி பட்டியல் தயாரிப்பதுடன் நாடாளுமன்றத் தேர்தல் ஆரம்பக் கட்ட பணியைத் தொடங்குவது, திமுகவில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கை முகாமை வெற்றிபெறச் செய்வது, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு அதிக வாக்குகள் பெற்றுத் தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

இந்த கூட்டத்தின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ராகுல் காந்திக்கு எம்பி பதவி பறிப்பு என்பது குற்றத்தின் அடிப்படையில் நடந்ததாக யாரும் கருதவில்லை. நீண்ட நாள் வழக்கு  நடந்து அதற்கு பிறகு அவருக்கு தரப்பட்ட அவகாசத்தின்படி மேல் முறையீட்டுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. நீதிமன்றமே அப்படி போகலாம் என்ற கதவை திறந்து விட்டுள்ளது. ஆனால், அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தும் முன்பாகவே, அவசர அவசரமாக அவருக்கு இப்படி ஒரு தண்டனையை வழங்கி இருப்பது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.

 

ஒரு மாபெரும் நாட்டை ஆளும், மாபெரும் தனி மெஜாரிட்டியுடன் ஆண்டு கொண்டிருக்கும் ஒரு கட்சி ஒரு தனி மனிதனை கண்டு அஞ்சுகிறதோ என்ற கருத்து அரசியல் நோக்கர்களுக்கு ஏற்படுகிறது. அதனால் தான் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள கட்சிகள் எல்லாம் இதனை கண்டித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு இந்தமுறை கண்டிப்பாக ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். இந்தமுறை படுக்கைக்கு அடியில் வைத்திருக்க முடியாது” என தனக்கே உரிய முறையில் விமர்சனம் செய்தார்.


 

சார்ந்த செய்திகள்