பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உடைகள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மாஸ்க் அணியாமல் இருந்தால் 200 ரூபாய் அபராதம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பண்டிகை காலம் என்பதால் விதிமுறைகளை இன்னும் அதிகப்படுத்த இனி பொதுஇடத்தில் மாஸ்க் அணியவில்லை என்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியும் போது வாய், மூக்கு முழுமையாக மூடியபடி மாஸ்க் அணிய வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சளி, இருமல் இருந்தால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில் கரோனா, ஒமிக்ரான் பாதிப்பின் உண்மையான விவரங்களை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 'நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமா அல்லது வீட்டிலேயே இருக்க வேண்டுமா? மக்களை அச்சுறுத்தாமல் அதேசமயம் உண்மையான பாதிப்பை மறைக்காமல் கூறவேண்டியது அரசின் கடமை. கரோனா தொற்றை கட்டுக்குள் வைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் திமுக அரசுக்கு உண்டு' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.