நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. அதே சமயம், அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையை தி.மு.க தொடங்கியுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும். இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும். பாசிசம் வீழும்! இந்தியா வெல்லும்!’ என்று பதிவிட்டுள்ளார்.