திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் 15- வது உட்கட்சி தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக வழக்கறிஞர், கழக நிர்வாகி என மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சில இடங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தலைமை தலைமை வரை சென்றது. அதாவது திமுகவின் தலைமை கழகம் முதல் கிளை கழகம் வரை, அமைப்பில் இரண்டு துணை செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அதில் ஒரு துணை செயலாளராக ஒருவர் பெண்ணாகவும், மற்றொருவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஆணாக இருக்க வேண்டும். இதனை பல கிளைகளில் சரியாக கடைப்பிடிக்கவில்லை என தமிழகம் முழுவதிலுமிருந்து புகார்கள் தலைமை கழகத்துக்கு சென்றுள்ளன.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் திமுக தலைமை கழகத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கிளை கழக தேர்தலில் கிளை அவை தலைவர், கிளை செயலாளர், பொருளாளர் தேர்வு செய்வது போல், துணை செயலாளர்களாக இருவரை தேர்வு செய்ய வேண்டும். அதில் ஒருவர் பெண்ணாகவும், மற்றொருவர் ஆணாகவும் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையர்கள் கண்காணித்து அதன்படியே தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.