Skip to main content

‘மோடி பதவியேற்ற நாளை தேசிய கறுப்புநாளாகக் கடைப்பிடிப்போம்!’ - தொல். திருமாவளவன்

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

‘Let us observe the day of Modi’s inauguration as National Black Day!’ - thirumavalavan

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி 40க்கும் மேற்பட்ட விவசாய அமைக்கள் ஒன்றுகூடி தலைகநர் டெல்லியில் தொடர்ந்து ஆறுமாத காலமாக போராடிவருகின்றனர். விவசாய சங்கங்களுக்கும் அரசு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால், அவர்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். இந்நிலையில், மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்ட தினமான 26ஆம் தேதியை தேசிய கருப்பு நாளாக அனுசரிக்க வேண்டும் என்று டெல்லியில் போராடிவரும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தனர். 

 

அதனை ஏற்று அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “மோடி அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள், மே 26ஆம் நாளை கறுப்பு நாளாகக் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதை ஏற்று தமிழகம் முழுவதும் மே 26ஆம் நாளை கறுப்பு நாளாகக் கடைப்பிடிப்போமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

 

2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதிதான் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். இப்போது அவர் அப்பதவியில் ஏழு ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் அவரது ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையின் மூலமாக ஏழை, எளிய மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானார்கள். மழை வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களின்போதும் கூட மோடி அரசு உரிய விதத்தில் மக்களுக்கு உதவ முன்வரவில்லை. கிராமப்புற ஏழை, எளிய மக்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும்கூட மோடி அரசு குறைத்துவிட்டது.

 

எஸ்சி-எஸ்டி, ஓபிசி பிரிவு மக்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய நிதியை ஒவ்வொரு ஆண்டாகக் குறைத்து, அவர்களுடைய முன்னேற்றத்தைத் தடுத்துவருகிறது மோடி அரசு. எஸ்சி துணைத் திட்டத்தின் கீழ் பட்ஜெட்டில் 16.6 சதவீதம் நிதி ஒதுக்குவதற்குப்  பதிலாக வெறும் 3.5 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டுக்குப் பல்வேறு தடைகளை அரசாங்கத்தின் மூலமாகவும், நீதிமன்றங்களின் மூலமாகவும் மோடி அரசு ஏற்படுத்திவருகிறது. அது கொண்டுவந்த 102ஆவது சட்டத் திருத்தத்தின் காரணமாக மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை அடையாளம் காண்பதும், இடஒதுக்கீடு அளிப்பதும் இயலாது என்ற நிலை உருவாகியிருக்கிறது. மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து எல்லாவற்றையும் தன் கையில் குவித்துக்கொண்டு மாநிலங்களை அதிகாரம் ஏதுமற்ற யூனியன் பிரதேசங்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.

 

கரோனா பேரிடரை எதிர்கொள்வதற்கு எவ்விதமான உருப்படியான திட்டங்களையும் வகுக்காமல் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க மோடி அரசு காரணமாகியுள்ளது. தடுப்பூசிகளை வழங்குவதிலும், ஆக்சிஜன் என்னும் உயிர்வளி ஒதுக்கீட்டிலும் பாரபட்சம் காட்டியதால் உச்ச நீதிமன்றமே தலையிடும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதை உலக அளவிலான ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுவருகின்றன.

 

அரசியலமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்திவரும் மோடி அரசு, பாராளுமன்றத்தையும் மதிப்பதில்லை. 70க்கும் மேற்பட்ட அவசர சட்டங்கள் மோடி அரசால் இயற்றப்பட்டுள்ளன. பெண்களுக்கும் சிறார்களுக்கும் எதிரான குற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

 

சிறுபான்மையினரை எதிரிகளாக சித்திரித்து இந்துக்களிடம் வகுப்புவாத வெறியை ஊட்டி, மயக்கி  அவர்களை ஏமாற்றி, வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த மோடியின் ஆட்சியில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் இந்துக்கள்தான். கரோனாவால் உயிரிழப்பவர்களிலும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுகிறவர்களிலும், மோடி அரசின் கொள்கைகளால் வேலை இழந்தவர்களிலும், ஜிஎஸ்டி முதலான வரிவிதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களிலும் இந்துக்கள்தான் அதிகம். எனவே, மோடியின் ஏழாண்டுகால ஆட்சி 'இந்துக்களுக்கு விரோதமான ஆட்சி' என்பதே உண்மை.

 

எல்லா தளங்களிலும் தோல்வி அடைந்துவிட்ட மோடி அரசு,  ஒரு மக்கள் விரோத அரசு என்பதில் எவருக்கும் கருத்து மாறுபாடு இல்லை. அதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் மோடி பதவியேற்ற மே 26ஆம் நாளை, விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று 'தேசிய கறுப்பு நாளாகக்' கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்