
கடந்த 4 ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''திமுகவை வீழ்த்தப்படுவதுதான் எங்களுடைய குறிக்கோள். ஓட்டுக்கள் சிதறாமல் ஒருங்கிணைத்து திமுகவை, மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்துவது அதிமுகவின் தலையாய கடமை. இது 2026 ஆம் தேர்தலில் நடக்கும் ''என்றார்.
அப்போது செய்தியாளர்கள் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'பாஜக கிஜக குறித்தெல்லாம் ஆறு மாதம் கழித்து கேளுங்கள். எல்லாமே யூகத்தின் அடிப்படையில் கேட்கும் கேள்வி. இதற்கு என்ன பதில் சொல்ல முடியும். நாங்கள் தான் சொல்லி விட்டோமே கூட்டணியில் வெட்ட வெளிச்சமாக செயல்படுவோம். இப்பொழுது இதுதான் நிலை. இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கிறது'' என்று பாஜக குறித்த கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக-பாஜக கூட்டணி வாய்ப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் 'பாஜகவால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம் எனக்கூறி வந்தவர்கள் எல்லாம் பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்'' என பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடப்பதாக யுகங்கள் கிளம்பியது.

அதிமுக நிர்வாகிகளிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அதை மறுத்து வந்தனர். இந்நிலையில் மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர், ''தயவு செய்து தவறாக பேசாதீர்கள். எங்கே நாங்கள் தவம் கிடக்கிறோம்? யார் சொன்னது? எந்த இடத்திலும் அப்படி கிடையாது. நீங்கள் போட்டுக் கொடுத்து வாங்காதீர்கள். நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஆறு மாதம் கழித்து கூட்டணி குறித்து பேசப்படும் என தெளிவுபடுத்தி விட்டேன். அதுதான் செய்தி'' என்று பதிலளித்தார்.