Skip to main content

“2017இல் நடந்ததை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் சுடுகிறது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Published on 17/03/2025 | Edited on 17/03/2025

 

Chief Minister's speech on the debate on AIADMK moves no-confidence motion against speaker appavu

2025 - 2026ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளின் போது, சபாநாயகர் அப்பாவு ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகக் கூறி அவரை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். மேலும், சபாநாயகருக்கு எதிராக  சட்டப்பேரவை செயலாளரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வழங்கினர். 

இந்த நிலையில், அதிமுக கொண்டு வந்த சபாநாயகரை நீக்கக் கோரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (17-03-25) நடைபெற்று வருகிறது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம், துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இப்பேரவை நூற்றாண்டு விழா கண்டுள்ளது. யார் மீதும் யாரும் விமர்சனம் வைக்கலாம், ஆனால், என்றாவது ஒரு நாள் அவரை நேரில் சந்திக்க வேண்டுமென்பதை மனதில் வைத்து கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும் என்று கலைஞர் சொன்னார். அவரது நூற்றாண்டு கொண்டாடும் வேளையில், இப்பேரவையில் தலைவராக பணியாற்றும் வாய்ப்பை அப்பாவு பெற்றிருக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு என்னால் இது போன்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டதை எண்ணி அன்றைக்கு நான் வருந்தினேன் என்பதை என்னுடைய உரையில் பதிவு செய்திருக்கிறேன். 

ஆனால், இத்தீர்மானம் இன்றைக்கு கொண்டுவரப்பட்டதன் மூலம், கடந்த பேரவையின் செயல்பாடுகள் அன்றைய பேரவைத் தலைவர் மதியாது நடந்துகொன்ட முறைகளைப் பற்றியும், இங்கே உள்ள பேரவை முன்னவர் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்குக் கூட நன்றாக தெரியும். நான் மீண்டும் அதை சொல்ல விரும்பவில்லை. அவற்றோடு, தற்போதையை பேரவைத் தலைவர் செயல்பாடுகளை ஒப்பீடு செய்து எவ்வாறு பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்படுகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக இந்த விவாதத்தை கருதுகிறேன். பேரவைத் தலைவர், ஜனநாயக உரிமைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மற்றவர்களின் மனம் புண்படாத வகையில் நடவடிக்கைகளை அமைத்து கொள்பவர். நேர்மையாக தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்கக் கூடிய பண்பு கொண்டவர். அவர் கணிவானவர், ஆனால் அதே நேரத்தில் கண்டிப்பானவர். இது இரண்டும் பேரவைத் தலைவருக்கு தேவை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். 

இந்த அவையில் என்னுடைய தலையீடோ அல்லது அமைச்சர்களின் தலையீடோ பேரவை நடவடிக்கையில் இல்லாத வகையில் தான் அப்பாவு நடந்து வருகிறார். கடந்த காலங்களில் நடைபெற்றது போல் அல்லாமல், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒன்றே என நினைத்து செயலாற்றி வருகிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது பாசம், பற்றும் கொண்டு செயல்படுகிறார் என்பதை மனசாட்சியோடு சிந்திக்கக் கூடியவர்கள் ஒப்புக்கொள்வார்கள். பேரவைத் தலைவர், எதிர்க்கட்சி உறுப்பினர்களோடு அடிக்கடி அன்போடு பேசும் காட்சிகளை உறுப்பினர்கள் அனைவரும் பார்த்துள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களோடு கண் ஜாடையாகப் பேசுவதை கூட நான் பார்த்திருக்கிறேன். எங்களை பொறுத்தவரைக்கும், விவாதங்களில் விருப்பு வெறுப்பின்றி வாதங்களை வைக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்கள். 

Chief Minister's speech on the debate on AIADMK moves no-confidence motion against speaker appavu

கடந்த 2017ஆம் ஆண்டின் போது, நான் இந்த அவையில் பேசியதை எண்ணிப் பார்க்கிறேன். எத்தனை விதிமீறல்கள், மரபுகளில் இருந்து விலகல்கள். என்னுடைய உரையில் நான் சுட்டிக் காட்டியுள்ளேன். நினைத்து பார்த்தாலே நெஞ்சம் சுடுகிறது. அதை அனைவரும் படித்து பார்க்க வேண்டும். அது மாதிரியாகவா இன்றைக்கு நடக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நான் அன்றைக்கு வேதனைப்பட்டேன். அந்த வேதனையின் வெளிப்பாடாக தான், அது மீண்டும் தொடரக் கூடாது என முடிவெடுத்தேன். இந்த அவையில் அது மாதிரியான விதிமீறல்கள், ஜனநாயகத்தை புறந்தள்ளும் மரபு மீறல்கள் எதுவும் நிகழக்கூடாது என்பதை முதல்வராக பொறுப்பேற்றவுடன் நான் காட்டிய உறுதியினால், அப்பாவுவிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். அவரும் அதை முழுமையாக உணர்ந்து, பேரவைத் தலைவராக தனது பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்.

இந்த தீர்மானம், அப்பாவுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் வைத்த வாதங்கள், உண்மைக்கு மாறான செய்திகள் என்ற காரணத்தால் அதனை மறுத்து விளக்கத்தை எடுத்து வைத்து பேரவைத் தலைவரின் நடுநிலையை பறைசாற்ற வேண்டிய கடமை முதல்வருக்கு உள்ளது. அவைக்கு ஒவ்வாத வார்த்தைகள் அன்றைக்கு பயன்படுத்தப்பட்ட அருகதை, தகுதி, என்ன யோக்கிதை இருக்கிறது?, என்று திமுக உறுப்பினர்களை பார்த்து அன்றைக்கு பேசப்பட்ட வார்த்தைகள் இன்றைக்கு அவையில் பேசப்படுமானால், உடனே பேரவைத் தலைவரால் அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. அன்றைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசினால், அவைக்குறிப்பில் இடம்பெறும், திமுக உறுப்பினர்கள் பேசினால் நீக்கப்படும் என்ற நிலை. இன்றைய பேரவைத் தலைவர் அப்படியா நடந்துகொள்கிறார்?. அதிமுக உறுப்பினர்கள் பேசுகின்ற இது போன்ற ஒரு சில வார்த்தைகளை பேரவைத் தலைவர் விட்டுவிடுகிறார். ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் பேரவைத் தலைவர் கண்டிப்பாக நடந்துகொள்கிறார் என அமைச்சர்கள் சொல்வதை கேட்கும் போது உண்மையில் நான் மன மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பு தர வேண்டும். இந்த அரசின் மீது குற்றம் சொல்ல வாய்ப்பு இல்லாத காரணத்தினால் இப்படியொரு தீர்மானமா? உட்கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தால் அதை திசை திருப்ப இப்படியொரு தீர்மானமா?. இப்படி ஒரு தீர்மானம் வெளியில் உள்ளவர்கள் நடத்தட்டும். ஆனால், இப்படியொருவர் மீது இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்ததை எண்ணி எதிர்காலத்தில் உங்கள் மனசாட்சி உறுத்தும். இந்த தீர்மானம், பேரவைத் தலைவர் மீது வீசப்பட்ட அம்பாகவே கருதுகிறோம். இந்த அம்பை இந்த அவை ஏற்காது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்