
தமிழக சட்டப்பேரவையில், 2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் நிதிநிலை அறிக்கையும், இரண்டாம் நாளில் வேளாண் அறிக்கையையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (17-03-25) தொடங்கியது. அப்போது அதிமுக கொண்டு வந்த சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. டிவிஷன் முறையில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது,
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறுவதற்கு முன்பு, வழக்கமான சட்டப்பேரவை அலுவல் நடைபெற்றது. அப்போது திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் பேசியதாவது, “திருவள்ளூர் தொகுதியில் உள்ள வடாரண்யேசுவரர் திருக்கோயிலில் மாந்திரீக பூஜை செய்வதற்காக மண்டபம் ஒன்று வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மக்கள், சனிக்கிழமை அன்று அங்கு வந்து மாந்திரீக பூஜை நடத்துகிறார்கள். அவர்கள் வந்து தங்கும் வசதிகள் ஏற்படும் வகையில், விடுதி ஒன்று அமைக்க வேண்டும். அதனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.
அதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “அந்த திருக்கோயிலில் மற்ற காரியங்கள் செய்வதற்காக அவர் அங்கு மண்டபம் கேட்டிருக்கிறார். உடனடியாக அதற்குண்டான துறை அதிகாரியை ஆய்வு செய்து வாய்ப்பு இருந்தால் நிச்சயமாக ஏற்படுத்தி தரப்படும். அந்த திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்தாண்டு மகா சிவராத்திரி பூஜை நடைபெறவிருக்கிறது” என்று கூறினார்.
உடனடியாக எழுந்த முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்புக் குழு எம்.எல்.ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, “சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கேள்வி கேட்கும் போது மாந்திரீக பூஜை பற்றி சொன்னார். மாந்திரீக பூஜை என்றால் என்ன என்பதற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கேட்கிறேன். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “ஓபிஎஸும் ஆன்மீகவாதி, நீண்ட நெடிய படிக்கட்டுகளில் பல திருக்கோயில்களில் அவரது எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக சுற்றி வருபவர். அவருக்கு தெரியாதது ஒன்றுமல்ல. மாந்திரீகம் என்ற வார்த்தை இந்த திராவிட மாடல் ஆட்சியில் எங்கும் நடைபெறுவது இல்லை. பரிகார பூஜையைத் தான் அவர் மாற்றி மாந்திரீக பூஜை என்று சொல்லிவிட்டார். பரிகாரப் பூஜை மண்டபம் தான் கேட்டார், நிச்சயம் அந்த மண்டபம் ஏற்படுத்தித் தரப்படும்” என்று நகைச்சுவையாகக் கூறினார். அமைச்சர் சேகர்பாபுவின் பதிலை கேட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் குலுங்கு சிரித்தார்.