இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து 62 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு செய்யப்பாட்டார்கள். தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் மற்றும் தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தேர்வானார்கள்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் புதிய எம்.பி.க்களாக தேர்வான 62 பேரின் பதவியேற்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், ராஜ்யசபாவுக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களின் பதவியேற்பு விழா இரு நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்தது. பதவியேற்க அனைவரும் வரவேண்டும் என ராஜ்யசபா தலைவர் வெங்கையாநாயுடு அறிவுறுத்தியிருந்த நிலையில், கரோனா பயத்தால் பலரும் வரவில்லை. 45 பேர் மட்டுமே பதவியேற்றுக் கொண்டனர்.
ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியிலிருந்து சென்னை திரும்பியதும், தலைமைச் செயலகம் சென்று, முதல்வர் எடப்பாடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் கே.பி.முனுசாமி.
தமிழகத்தின் நலன்களுக்கான உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கட்டும் என கே.பி.முனுசாமியை வாழ்த்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி!