காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. மாநில மாணவர் அணி செயலாளருமான வக்கீல் எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதில் பாராபட்சம் நிலவுகிறது. காஞ்சிபுரம் பொதுமக்கள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கும் விதத்தில் அடையாளமாக கடை அடைப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் அரசின் கவனத்தை ஈர்க்கும் முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அரசு போராட்டத்தின் நியாயத்தை கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தை சமமாக பிரிக்க வேண்டும். ஒருங்கிணைந்த மாவட்டம் பிரிக்கப்படும் போது, கடைப்பிடுக்கபடும் அடிப்படை நியாயத்தின்படி புதியதாக உருவாக்கப்படும் மாவட்டத்தை விட ஏற்கனவே உள்ள மாவட்டம் எந்த வகையிலும் சிறுமைப் படுத்தாமல் அக்கறையுடனும் கவனத்துடனும் பிரிந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மண்ணை சிறுமைப்படுத்தாமல், கூடுதல் பகுதியை திரும்ப அளித்து அறம் செய்யுமா அரசு என்று காஞ்சி எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட தலைநகராக காஞ்சிபுரம் நகரம் என்ற தகுதி பெற்று 52 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் மாவட்ட தலைமை நகருக்கு வர வேண்டிய அரசு அலுவலகங்கள், கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமையாக பெறாமல் கடந்துவிட்டது.
மாவட்ட நீதிமன்றம் தலைநகர் காஞ்சிபுரம் வேண்டும் என்று ஓராண்டு போராடி 2009 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம்-2 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அரசால் வழங்கப்பட்டது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகரமாக விளங்கிய காஞ்சி மண்ணிற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு என்றாலும், பல்லவ பேரரசின் தலைநகராக விளங்கி அதன் துறைமுகமாக மல்லையும் மாவட்ட எல்லையில் ஒன்று கடற்கரை எல்லையும்,சிறப்பு பகுதி யாக பல்லவபுரம் நகரமும் ஒன்றாகக் கொண்டு விளங்கிய மாவட்டம், தற்போது மூன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிகச் சுருங்கிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு இனியாவது இதை கருத்தில் கொண்டு மாவட்ட எல்லையில் மாற்றம் செய்து நாளை அறிவிக்குமா? மாவட்ட தலைநகரான காஞ்சிபுரமத்தில் அரசின் அனைத்து துறைகளின் அலுவலகமும் அமைக்கப்பட்டு, அதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துமா?
நாளை நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்திற்கு வழங்க வேண்டிய அரசு மருத்துவக்கல்லூரி, சட்டக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடனடியாக அமைக்க அறிவிப்பாரா?
சுற்றுலா அலுவலகம் ,வேளாண்மை பொறியியல் அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம், நகர ஊரமைப்பு துறை மற்றும் புதுநகர் வளர்ச்சி குழுமம் போன்ற அரசு அலுவலகங்களை உடனடியாக அமைக்க அறிவிப்பாரா?
முழுமையான அதிகாரம் பெற்ற மாவட்ட நீதிமன்றம் அறிவித்து, அதற்கான புதிய கட்டிட வளாகம் கட்ட அறிவிப்பு வெளியிடுவாரா?
மேலும் குடிநீர் பிரச்சினை தீர சாத்தனூர்- அரக்கோணம் குடிநீர் திட்டத்தில் காஞ்சிபுரத்திற்கு இணைப்பு தந்திட நான் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி தருவாரா?
அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், எல்லாவற்றுக்கும் மேலாக அறிஞர் அண்ணாவின் கனவான காஞ்சிபரத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படுமா ? அறிஞர் அண்ணா அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையை உலகத்தரத்தில் சிகிச்சை மையமாக மேம்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுமா?
இப்படி பல்வேறு வசதிகளுடன் மாவட்டத் தலைநகரமான காஞ்சிபுரத்தினை மேம்படுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களின் இயக்கமாகவும் ஏக்கத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ஆகவே நாளை முதல்வர் இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தை பொது மற்றும் இயற்கை நீதியுடன் சமமாகப் பிரித்து மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு கூறியுள்ளார்