![Corsell type security](http://image.nakkheeran.in/cdn/farfuture/jPYQhgndMTwppCa48yrXqQ8i0xUVW_TQVdyXu-GAbK8/1620370161/sites/default/files/inline-images/stalin-swearing-ceremony-5_0.jpg)
சாதாரணமான காவல்துறை பாதுகாப்புடன் வலம்வந்த மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அவரது பாதுகாப்புகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் தலைவர்களுக்கு உயர்மட்ட பாதுகாப்பு இருந்துவந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு எடுத்த சில முடிவுகளின்படி, அரசியல் தலைவர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் குறைக்கப்பட்டன. அந்த வகையில், சி.ஆர்.பி.எஃப். வகையிலான சிறப்பு கமாண்டோ பாதுகாப்பு படை பாதுகாப்பினைப் பெற்றுவந்த ஸ்டாலினுக்கு, அவை விலக்கப்பட்டு, மிகச் சாதாரணமான போலீஸ் பாதுகாப்பு போதும் என்கிற வகையில் குறைக்கப்பட்டன.
தற்போது தமிழக முதலமைச்சராகியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். முதல்வர் பதவியில் இருப்பவர்களுக்கு என்.எஸ்.ஜி. என சொல்லப்படுகிற தேசிய பாதுகாப்புப் படை வழங்கப்படும். அதாவது கறுப்புப் பூனைப் படை பாதுகாப்பு என எளிமையாகச் சொல்வதுண்டு. அதேசமயம், ஜெயலலிதா ஆட்சியின்போது எஸ்.எஸ்.ஜி என்கிற சிறப்பு பாதுகாப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு, அவருக்கான பாதுகாப்பு வலிமையாக்கப்பட்டது. 500க்கும் அதிகமான காவல்துறையினர் இந்தப் படைப்பிரிவில் பாதுகாப்பைக் கண்காணித்துவந்தனர். ஜெயலலிதாவுக்கு பிறகு 2006இல் ஆட்சிக்குவந்த கலைஞர், இந்த எஸ்.எஸ்.ஜி. படைப் பிரிவில் உள்ள காவல்துறையினரின் எண்ணிக்கையை 130 ஆக குறைத்தார்.
![Corsell type security](http://image.nakkheeran.in/cdn/farfuture/G-M-mDv7pO8Lfs037hIVoHKzOMtDTWw2qL28nLI1eLk/1620370264/sites/default/files/inline-images/stalin-swearing-ceremony-3.jpg)
மேலும் அந்தப் படைப் பிரிவுக்கு கோர்செல் எனவும் பெயரிட்டார் கலைஞர். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலம்வரை இந்தப் படைப்பிரிவு கோர்செல் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோர்செல் படைப்பிரிவு, எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரியின் தலைமையில் இயங்கும். மேலும், இந்தப் பிரிவில் ஒரு கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி.க்கள் 2 பேர், இன்ஸ்பெக்டர்கள் 3 பேர் இருப்பர். இந்த தனிப்பிரிவு ஒரு நாளைக்கு 3 ஷிஃப்டுகளில் இயங்கும். இவர்கள்தான் முதல்வருக்கு மெய்க்காப்பாளராக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சஃபாரி உடையுடன் வலம்வருவார்கள். இவர்களுக்கான கேம்ப் அலுவலகம், முதல்வரின் இல்லத்தில் இருக்கும். இந்தப் படைப்பிரிவில் ஒவ்வொரு நிலையிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் போலீஸார் பணிபுரிவார்கள். இது தவிர, ஸ்டாலினின் பயணத்தின்போது கொடுக்கப்படும் பாதுகாப்பு வசதிகள் தனித்தனியாக இயங்கும். குண்டு துளைக்காத கார் உள்ளிட்ட எஸ்கார்டு பாதுகாப்பும் வழங்கப்படும். இப்படி 3 பிரிவுகள் அடங்கிய இந்த வகையிலான கோர்செல் பாதுகாப்பு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.